இலங்கையில் பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல் – சிப்பாய் கைது
24 சித்திரை 2026 வெள்ளி 15:35 | பார்வைகள் : 2252
பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி கடந்த 20-ஆம் திகதி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், 14 வயதுச் சிறுமி தனது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையிலுள்ள வீட்டிற்குச் செல்வதற்காக ஏறியுள்ளார். அதேவேளை, விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய குறித்த இராணுவச் சிப்பாயும் அதே பேருந்தில் ஏறிச் சிறுமிக்கு அருகில் அமர்ந்துள்ளார்.
பேருந்து மன்னம்பிட்டிப் பகுதியைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த இராணுவச் சிப்பாய் சிறுமி மீது பாலியல் ரீதியான அத்துமீறல்களைச் செய்ய முற்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அருகில் இருந்த தனது சிறிய தந்தையிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அதனையடுத்து, ஆத்திரமடைந்த சிறிய தந்தை குறித்த இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த பேருந்து சாரதி, பேருந்தை நேராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தினார். அங்கு நடந்த விபரங்களைச் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இராணுவச் சிப்பாயைப் பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், தாக்குதலை மேற்கொண்ட சிறுமியின் சிறிய தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இராணுவச் சிப்பாய் குணமடைந்து வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் வெளியேற முற்பட்டபோது அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயை வெள்ளிக்கிழமை (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire