Paristamil Navigation Paristamil advert login

காதல் வெளிப்புற அழகை தாண்டியது! பாரதிராஜா படங்கள் கற்றுக்கொடுத்த 5 வாழ்க்கை பாடங்கள்!

காதல் வெளிப்புற அழகை தாண்டியது! பாரதிராஜா படங்கள் கற்றுக்கொடுத்த 5 வாழ்க்கை பாடங்கள்!

2 ஆடி 2026 வியாழன் 15:00 | பார்வைகள் : 1136


இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு. 16 வயதினிலே முதல் முதல் மரியாதை வரை அவரது படங்கள் இன்றைய கால தம்பதிகளுக்கு கற்றுக்கொடுத்த 5 முக்கிய உறவுப் பாடங்கள் இதோ!

"என் இனிய தமிழ் மக்களே..." என்ற ஒற்றை குரலால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கட்டிப்போட்ட "இயக்குனர் இமயம்" பாரதிராஜா இன்று (ஜூன் 10, 2026) காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றாலும், அவர் திரையில் செதுக்கிய கதாபாத்திரங்கள் என்றும் நம் மனதில் வாழும். குறிப்பாக, காதல் மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் ஆழமான அர்த்தங்களை பாரதிராஜாவின் படங்கள் நமக்கு எப்படி உணர்த்தியுள்ளன என்பதை இங்கு பார்ப்போம்.

உண்மையான காதலுக்கு தைரியமும் நேர்மையும் அவசியம்
பாரதிராஜாவின் அறிமுகப் படமான '16 வயதினிலே', தமிழ் சினிமாவில் காதலை மிகவும் எதார்த்தமாகப் பதிவு செய்த படமாகும். இதில் காதல் என்பது வெறும் கவர்ச்சியோ அல்லது ஈர்ப்போ அல்ல. ஒருவருக்காக பாறை போல நிற்பது, துரோகங்களை கடந்து நேசிப்பது என்பதை பாரதிராஜா மூலம் காட்டியிருப்பார்.

சமூக வலைத்தளங்களின் யுகத்தில் வாழும் இன்றைய கால தம்பதிகளுக்கு, நேர்மையும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் நம்பிக்கையும் மட்டுமே காதலை நீண்ட காலம் வாழ வைக்கும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

குடும்ப பாசம் வாழ்க்கையின் மிகப்பெரிய பலம்
சகோதர பாசம், தியாகம் மற்றும் கூட்டுக்குடும்பத்தின் பலத்தை 'கிழக்கு சீமையிலே' படத்தில் மிக அழகாக காட்சிப்படுத்திருப்பார்.

தற்போதைய மார்டன் உலகில் பலரும் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொண்டே போகிறார்கள். ஆனால், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் குடும்பத்தின் ஆதரவு மட்டுமே ஒரு மனிதனுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதை இப்படம் அழுத்தமாக பேசுகிறது.

காதல் என்பது வெளிப்புற அழகை தாண்டியது
பாரதிராஜாவின் பல காதல் கதைகளில், காதல் என்பது வெறும் வெளித்தோற்றத்தையோ அல்லது பொருளாதார வசதியையோ சார்ந்ததாக இருந்ததில்லை. ஒருவரின் குணநலன், அவர் காட்டும் அன்பு, புரிதல் மற்றும் அடுத்தவரை மதிக்கும் மனப்பான்மை மட்டுமே ஒரு உறவை நீண்ட காலம் நிலைக்க செய்யும் என்பதை ஆழமாக பதிவு செய்திருப்பார்.

இன்றைய சோசியல் மீடியா காலத்தில், வெளிப்புற அழகுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், உண்மையான மற்றும் நீடித்த உறவுகள் எப்போதும் இரு மனங்களின் எதார்த்தமான இணைப்பால் மட்டுமே உருவாகும் என்பதை பாரதிராஜாவின் படங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

உறவுகளில் புரிதல் அவசியம்
மதம் மற்றும் சமூகப் பின்னணிகளைக் கடந்து இரு இதயங்கள் இணையும் போது, வெளிப்புற அழுத்தங்கள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை 'அலைகள் ஓய்வதில்லை' வெளிப்படுத்தியது.

ஒரு உறவு நீடிக்க வேண்டுமெனில், இருவருக்குள்ளும் வெளிப்படையான உரையாடல்களும், ஆழமான புரிதலும் அவசியம். வெளிப்புற சவால்களை விட, ஒருவருக்கொருவர் காட்டும் நம்பிக்கையே உறவுகளை வலுப்படுத்தும் என்பதை பாரதிராஜா அழகாக தெரிவித்திருப்பார்.

காதல் என்பது கட்டுப்படுத்துவதல்ல, மதிப்பது
பாரதிராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் முதல் மரியாதை, மனித உறவுகளின் நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்திய படமாகும். ஒருவரை நேசிப்பது என்பது அவரைக் கட்டுப்படுத்துவது அல்ல. அவரது தனித்தன்மையையும், உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொள்வதே உண்மையான அன்பு என்பதை இந்த படம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
அமெரிக்காவின் Gottman Institute வெளியிட்ட உறவுகள் குறித்த விளக்கங்களின்படி, நம்பிக்கை, அர்ப்பணிப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் திறந்த உரையாடல் ஆகியவைதான் நீடித்த உறவுகளின் அடித்தளம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாரஸ்யம் என்னவென்றால், பல தசாப்தங்களுக்கு முன்பே பாரதிராஜா தன் திரைப்படங்களின் கதைக் கருவாக இந்த உணர்வுகளைத்தான் முதன்மையாக வைத்திருந்தார்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குகிற்கு மட்டுமல்ல, அவை வாழ்க்கையை நமக்கு புரிய வைக்கும் கண்ணாடிகள். அந்த வகையில், கிராமத்து மண்ணையும் மனிதர்களையும் நேசித்த பாரதிராஜா, தன் படங்களின் மூலம் நமக்கு விட்டு சென்றிருக்கும் உறவு பாடங்கள் காலத்தால் அழியாதவை.