Paristamil Navigation Paristamil advert login

மருத்துவ பரிசோதனைகளில் போலி உண்ணாவிரதம் அம்பலம் - சிக்கலில் சுரேஷ் சலே

மருத்துவ பரிசோதனைகளில் போலி உண்ணாவிரதம் அம்பலம் - சிக்கலில் சுரேஷ் சலே

2 ஆடி 2026 வியாழன் 18:17 | பார்வைகள் : 1062


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே, சட்டத்தின் முன்னிலையில் இருந்து தப்பிப்பதற்காகவும் விசாரணைகளை திசைதிருப்புவதற்காகவுமே உண்ணாநோன்பு என்ற போலி நாடகத்தை அரங்கேற்றினார்.

அது விசேட மருத்துவ குழுவினரின் தீவிர பரிசோதனைகள் மூலம் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜனபலய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர குற்றம் சாட்டினார்.

கொழும்பு பொரளை என்.எம். பெரேரா கேந்திர மத்திய நிலையத்தில் நேற்று (1) நடைபெற்ற ஜனபலய கூட்டமைப்பின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே, தனக்கு கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகக் கூறி கடந்த ஜூன் மாதம் 06 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்தவாறே ஒரு உண்ணாநோன்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரியான ஷாணி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக விசாரணைப் பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் மற்றும் தங்களை புலனாய்வு பிரிவின் காவலிலிருந்து நீக்கி உடனடியாக விளக்கமறியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட போது அதற்கு எதிராக உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுத்த போராட்டமும் மிகக் குறுகிய காலத்தில் மக்கள் ஆதரவின்றி தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கமோ அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளோ இவ்வாறான எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் பணியவில்லை.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சலேயை கடந்த சில வாரங்களாக விசேட வைத்தியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தீவிர உடலியல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர். இந்த மருத்துவ பரிசோதனைகளின் உத்தியோகபூர்வ முடிவுகளின் மூலம், அவர் உண்மையாக உண்ணாவிரதம் இருக்கவில்லை என்பதும், அது முற்றிலும் போலியான ஒரு நாடகம் என்பதும் மருத்துவ ரீதியாக அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மருத்துவ குழுவினரால் உண்மை ஒட்டுமொத்தமாக வெளிக் கொண்டுவரப்பட்ட நிலையிலேயே, அவருக்கு இந்த உண்ணாவிரத நாடகத்தை மேலும் தொடர்வதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் போனது. இதனாலேயே வேறு வழியின்றி, நேற்று மதிய வேளையில் தனது உண்ணாநோன்பு போராட்டத்தை அவர் அவசரமாகக் கைவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு போன்ற மிலேச்சத்தனமான படுகொலைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய பிரதான குற்றவாளியான சுரேஷ் சலே, தான் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்குத் தேவையான சாட்சிகளை வழங்க முன்வருவதில்லை. மாறாக, விசாரணைக்கு இன்றியமையாத சான்றுகள் அடங்கிய அவரது தனிப்பட்ட கணினியின் கடவுச்சொல்லைக் கூட அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்து, சட்டத்தை ஏமாற்ற முற்படுகிறார்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் இவ்வாறான விசித்திரமான நாடகங்களை அரங்கேற்றி தப்பிக்க முயலும் சுரேஷ் சலே போன்றவர்களின் தந்திரோபாயங்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் இருந்து இயங்கும் அரசியல் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கும் நாட்டு மக்கள் இனிமேலும் ஏமாறப் போவதில்லை என்றார்.