தவெக.,வினரை திமுக.,வில் சேர்க்க பேரம் பேசியதாக 3 பேர் கைது!
3 ஆடி 2026 வெள்ளி 08:16 | பார்வைகள் : 701
த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சி எம்.எல்.ஏ., இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த, 'யூ டியூபர்' திருநாவுக்கரசு உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் துாண்டுதல் காரணமாக இந்த சதித் திட்டம் அரங்கேறியுள்ளதாக போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ., இளையராஜா, கடந்த மாதம் 29ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சில தினங்களுக்கு முன், திருவல்லிக்கேணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கியிருந்தபோது, என் மொபைல் போனில் திருநாவுக்கரசு என்பவர் தொடர்பு கொண்டார். 'யூ டியூப் சேனல்' மற்றும் ஐ.பி.டி.எஸ்., எனும் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார்.
மேலும், 'முக்கிய கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதால், உங்களை சந்திக்க வேண்டும். அதற்கு நேரம் சொல்லுங்கள்' என்றார். நான் வேறு பணியில் இருப்பதாக கூறி, தொடர்பை துண்டித்து விட்டேன். எனினும், அவர் மீண்டும் பல முறை தொடர்பு கொண்டார்.
அவரது மொபைல் போன் அழைப்பை ஏற்றபோது, 'சட்டசபையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
'நீங்கள் ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், ஓட்டெடுப்பு நடக்கும்போது, நாங்கள் கூறும்படி நடந்து கொள்ள வேண்டும்; சன்மானமாக 35 கோடி ரூபாய் தரப்படும்' என கூறினார் .
இதனால், அதிர்ச்சியடைந்த நான், 'நீங்கள் சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்' என, கண்டிப்புடன் கூறி விட்டேன். அப்போதும், திருநாவுக்கரசு விடாமல் மீண்டும் தொடர்பு கொண்டு, மிரட்டும் தொணியில் பேசினார்.
ஒரு கட்டத்தில், 'நாங்கள் பேசியதை வெளியில் சொன்னால், நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
பொது ஊழியரான என்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்து, லஞ்சம் தர முயற்சித்ததோடு, எனக் கும், என் குடும்பத்தினருக் கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திருநாவுக்கரசு மற்றும் அவரது பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் இளையராஜா கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை திருவல்லிக்கேணி போலீசார், த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜாவிடம் 35 கோடி தருவதாக பேரம் பேசி, திருநாவுக்கரசு மிரட்டல் விடுக்கும் ஆடியோ பதிவை பெற்று, ஆய்வு செய்தனர். அதில், பேரம் பேசியதும், மிரட்டல் விடுத்ததும் உண்மை என, தெரியவந்தது.
இதையடுத்து, இளையராஜாவை மிரட்டிய, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, 45 , திருச்சியைச் சேர்ந்த நரேஷ், 40, சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், 40, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். மூவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை, தற்போது கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் சந்தித்துள்ளார். அசோக்குமார் தான் இந்த திட்டத்தை தீட்டி கொடுத்துள்ளார்.
ஊத்தங்கரை த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா உட்பட இன்னும் சில எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசுமாறு, நரேஷிடம் அவர் கூறியுள்ளார். அதன்படி, தன் கூட்டாளிகளான திருநாவுக்கரசு, தியாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசும் பணியை நரேஷ் தொடங்கி உள்ளார்.
செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது துாண்டுதலின்படி, த.வெ.க., ஆட்சியை கவிழ்க்கும் சதிச் செயலுடன், இந்த கும்பல் பேரம் பேசியதும், மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது. திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூவரையும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், போலீசார் நேற்று ஆஜர் படுத்தினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மூவரையும், ஜுலை 15 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில், கரூரை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகியோரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும், திமு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின், தீவிர ஆதரவாளர்கள்.
போக்குவரத்து துறையில், வேலை வாங்கி தருவதாக எழுந்த புகாரில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
'எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க ஸ்டாலின் முயற்சி'
தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் இணைந்து, குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக, கடந்த 40 நாட்களாக கூறி வந்தோம். ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோரின் உத்தரவுப்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு, 10 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி வருகின்றனர்.
ஐந்தாண்டுகளாக கொள்ளை அடித்தவர்களால், சும்மா இருக்க முடியவில்லை. குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க, எம்.எல்.ஏ.,க்களை விலை பேசி வரு கின்றனர். அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக த.வெ.க.,மீது குற்றஞ்சாட்டிவிட்டு,குதிரை பேரத்தில் ஸ்டாலின் ஈடுபடுகிறார். தேர்தலில், முதல்வராக இருந்த ஸ்டாலினே தோற்று போயிருக்கிறார். இனியாவது திருந்துங்கள். மக்கள் தீர்ப்பை ஏற்று, அரசியலை விட்டு ஒதுங்கி விடுங்கள் .
எம்.எல்.ஏ.,க்களை விலை பேசியது வெளியில் வந்து விட்டதால், அதை மறைக்க, த.வெ.க., குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக, கவர்னரிடம் தி.மு.க., புகார் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire