Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., மாஜி கைது நடவடிக்கையில் பின்னடைவு; அதிகாரிகளை மாற்றும் முடிவில் அரசு

தி.மு.க., மாஜி கைது நடவடிக்கையில் பின்னடைவு; அதிகாரிகளை மாற்றும் முடிவில் அரசு

6 ஆடி 2026 திங்கள் 08:56 | பார்வைகள் : 1075


தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே ஜாமினில் வெளியே வந்ததை பின்னடைவாக கருதும் தமிழக வெற்றிக் கழக அரசு, மெத்தனமாக இருந்த போலீஸ் அதிகாரிகளை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசியதாக, கடந்த 3ம் தேதி, அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்த போலீசார், சில மணி நேரம் துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வைத்து விசாரித்த பின், இரவு பத்தரை மணியளவில் திருச்செந்துார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு 12 மணியளவில், நீதிபதி சிதம், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமினில் விடுவிக்கப்பட்டது, த.வெ.க., அரசுக்கு பின்னடைவு என பரவலாக பேசப்படுகிறது. இதில் போலீஸ் அதிகாரிகள் கோட்டை விட்டு விட்டதாகவும், அனிதா ராதாகிருஷ்ணன் 'ஸ்கோர்' செய்துவிட்டதாகவும் கருதப்படுகிறது.

இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிவான இரண்டு சட்டப் பிரிவுகளுமே ஜாமினில் வெளியே வரக்கூடிவை தான். ஆனால், அவரை வெளியே விட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என, அரசு தரப்பு வழக்கறிஞர் வனிதா வாதாடினார்.ஆனால், போலீசார் வேண்டுமென்றே அனிதா ராதாகிருஷ்ணனை அலைக்கழித்ததாக, கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் ஜான் அலெக்சாண்டர் வாதிட்டார்.

அவதுாறு வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆத்துார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த '41 ஏ நோட்டீசை' பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன், வரும் 10 ம் தேதி நேரில் ஆஜராவதாக வழக்கறிஞர் வாயிலாக பதில் கூறி இருந்தார். அப்படி இருந்தும், ஏன் அவசரமாக கைது செய்ய வேண்டும், அந்த கைது நடவடிக்கையிலும் உரிய விதிமுறைகளை பின்பற்றாதது ஏன், முன்னாள் அமைச்சர் என்பது மட்டுமின்றி, தற்போது மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவர், எப்படி சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவார் என, அனிதா ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு காவல் துறை தரப்பில் பதில் இல்லை.

அனிதா ராதாகிருஷ்ணன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஜாமின் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கப்பட்டது. இந்த விவகாரத்தில் போலீசார் அவசரப்பட்டிருக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர். அனிதா ராதாகிருஷ்ணன் கைது, சட்டப்படியான நடவடிக்கையே என, அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் கூறினாலும், அதே சட்டப்படி தான், அவர் சில மணி நேரத்திலேயே வெளியே வந்துள்ளார்.

இந்த விவகாரத்தை போலீசார் கவனமாக கையாளவில்லை என கருதும் அரசு, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், மெத்தனமாக இருந்த போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3