Paristamil Navigation Paristamil advert login

நியூஸிலாந்தில் இலங்கையருக்கு சிறைத்தண்டனை - நாடு கடத்தல் உத்தரவு

நியூஸிலாந்தில் இலங்கையருக்கு சிறைத்தண்டனை - நாடு கடத்தல் உத்தரவு

6 ஆடி 2026 திங்கள் 14:04 | பார்வைகள் : 1293


நியூஸிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவருக்கு, 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு தங்கியிருந்த முதியவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்ட விதானகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிறைஸ்ட்சேர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர் மீதான அடையாள பாதுகாப்பு உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னர் இன்றைய தினமே இவரது பெயர் பொதுவெளியில் வெளிப்படுத்தப்பட்டது.

பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த போது, இரு வயோதிப பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமையும், மற்றவரை சட்டவிரோதமான முறையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நபரால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் உடல் மற்றும் மனநிலை மிகவும் பலவீனமாக இருந்துள்ளது.

ஒரு பராமரிப்பாளராக அவர் மீது முதியவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்தச் செயல் முற்றாகச் சிதைத்துவிட்டதாகவும் நீதிபதி ஜேன் பேரிஷ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மேலும், 11 வயதுச் சிறுமி ஒருவரைத் தனது வாகனத்திற்கு அழைத்தமை மற்றும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பான மற்றுமொரு வழக்கிலும் இவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்று தனது தாயாரிடம் தகவல் வழங்கியதை அடுத்தே, இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ச்சியாக மறுத்து வரும் இலங்கையர் எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.

தண்டனைக் காலத்தின் மூன்றில் ஒரு பகுதியைச் சிறையில் கழித்த பின்னர், இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என உத்தரவிடப்பட்டுள்ளது.