Paristamil Navigation Paristamil advert login

ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்; இஸ்ரோ அறிவிப்பு

ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்; இஸ்ரோ அறிவிப்பு

7 ஆடி 2026 செவ்வாய் 13:45 | பார்வைகள் : 292


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ககன்யான் திட்டத்திற்கான, சோதனை கலனின், பாராசூட் விரித்தல் மற்றும் மீட்பு அமைப்புகளை சோதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சோதனை ஏவுகணை வாகனமான, 'சால்வ்' தரை வழி சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது' என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பலகட்ட சோதனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது 'சால்வ்' எனும் சோதனை விண்கலத்தை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவி, சோதனைகளை நிறைவு செய்துள்ளது.

இது குறித்து, இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை:'வியோநாட்ஸ்' எனும் மூன்று விண்வெளி வீரர்கள் குழுவை, 400 கி.மீ., புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களை மூன்று நாள் விண்கலத்திலேயே தங்க வைத்து,  பின், அவர்களை பாதுகாப்பாக, இந்திய கடல்பரப்பில் இறக்கி, மீட்பதே, ககன்யான் சோதனை திட்டம். விண்வெளி வீரர்களை ஏற்றி செல்ல, ஏவுகனை வாகனம் 'மார்க் 3' எனும் எல்.வி.எம் - 3 எனும் கலம் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த கலத்தில் மனிதர்களை ஏற்றி அனுப்பும் முன், அவர்களின் உயிர் காக்கும் அமைப்புகள், அவர்கள் தப்பிக்கும் அமைப்புகள், விண்கலத்தின் வேகத்தை குறைக்கும் திட எரிபொருளின் தன்மை, வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும் விரிய வேண்டிய பாராசூட்டுகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில், 'சப் - ஆர்பிட்டல் லாஞ்ச் வெஹிக்கிள் பார் எக்ஸ்பெரிமென்ட்ஸ்' எனும் சோதனை வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் செயல்பாடுகளை அறியும் சோதனைகளில் ஒன்றான, தரைவழி சோதனை, தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனால், பாரசூட் அமைப்பின் செயல்பாடு, திட மோட்டார் செயல்பாடு ஆகியவை நிரூபிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச்சில், ககன்யான் விண்கலம், நம் விண்வெளி வீரர்களை சுமந்து, விண்வெளிக்கு செல்லும். இவ்வாறு அவர்கள் கூறினர்.