அரசு வக்கீல் நியமனத்தில் தகுதி, நேர்மைக்கு முக்கியத்துவம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை
8 ஆடி 2026 புதன் 05:26 | பார்வைகள் : 220
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தகுதி, நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலுாரில், வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரி, இருவர் தாக்கல் செய்த மனு மீது, நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இங்கு ஜாமின் மனு நிலுவையில் இருந்த காலகட்டத்தில், மனுதாரர்களுக்கு மதுரை கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்துள்ளது. அந்நீதிமன்ற நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் அழகனிடம் இந்நீதிமன்றம் விளக்கம் கோரியது.
அந்நீதிபதி, 'உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தது குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தன் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. அரசு தரப்பு ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது.
அதன் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குமாறு அரசு தரப்பிடம் கேட்டேன். உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு நிலுவையில் உள்ளதை அரசு வழக்கறிஞரோ, விசாரணை அதிகாரியோ கவனத்திற்கு கொண்டு வரவில்லை' என, விளக்கமளித்துள்ளார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் அழகன், 'ஜாமின் வழங்குவதை எதிர்த்து, எழுத்துப்பூர்வமான ஆட்சேபனையை தாக்கல் செய்தேன். அதில் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டிருந்தேன்' என, பதிலளித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு நிலுவையில் இருந்தபோது, மனுதாரர்கள் மீண்டும் தாக்கல் செய்த மனு அடிப்படையில், கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது நீதித்துறை ஒழுங்குமுறை தொடர்பான முக்கிய கேள்வியை எழுப்புகிறது. உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டில், ஜாமின் தொடர்பான விவகாரத்தை பரிசீலித்து வரும் நிலையில், இணையாக அமர்வு நீதிமன்றம் பரிசீலிப்பதை தவிர்க்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு நிலுவையில் இருந்தது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் கீழமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இது முறையானதல்ல; கண்டிக்கத்தக்கது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இவ்வழக்கு எடுத்துக்காட்டுகிறது.
விசாரணை அமைப்பு, நீதிமன்றத்திற்கு இடையிலான முக்கிய இணைப்பு பாலமாக அரசு தரப்பு வழக்கறிஞர் அல்லது அரசு சட்ட அலுவலர் செயல்படுகிறார். வழக்குகளில் நீதிமன்றத்திற்கு திறம்பட உதவிகள் செய்யாவிடில், பாதிக்கப்பட்டவர்களின் நலன்கள் மட்டுமல்லாமல், பொது நலனும் பாதிக்கப்படுகின்றன. இறுதியில், நீதி நிர்வாகத்தின் அடிப்படையே பலவீனமடையும்.
அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வது குறித்த அரசாணையில், தகுதி, அனுபவம், நேர்மை, நம்பகத்தன்மை, வாதிடும் திறன், சட்ட அறிவு, வழக்கு ஆவணங்கள் தயாரிக்கும் திறன், கல்வி பின்னணி குறித்து தேர்வுக்குழு திருப்தியடைய வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
சில சந்தர்ப்பங்களில் சட்ட அலுவலர் நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளப்படாமல், ஆளும் கட்சியுடனான நெருக்கம் அல்லது விசுவாசம் அடிப்படையில் செய்யப்படுவதாக ஒரு வழக்கில் இந்நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்திய சட்ட ஆணையம், 'அரசு தரப்பு வாதத்தின் தரத்தை பாதிக்கும் வகையிலோ அல்லது தகுதி, அனுபவம் மற்றும் நேர்மை ஆகியவற்றை முறையாக ஆய்வு செய்யாமலோ மாநில அரசுகள் தங்கள் விரும்பியபடி அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் நடைமுறையானது தன்னிச்சையான செயல்பாடுகளுக்கே வழிவகுக்கும்' என, சுட்டிக்காட்டியது.
அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவோரின் அனுபவம், தகுதி, நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அது பரிந்துரைத்தது.
பி.என்.எஸ்.எஸ்., சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, அரசு இப்பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை; தற்போதைய சட்ட விதியானது அரசு வழக்கறிஞர்களின் நியமனத்திற்கு அனுபவம் என்ற அளவுகோலை மட்டுமே குறிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் வகிக்கும் முக்கிய பங்கு, இந்திய சட்ட ஆணைய பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, இந்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் போது பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire