இந்தியாவிடம் ஏவுகணை வாங்க இந்தோனேஷியா ஒப்பந்தம்!
8 ஆடி 2026 புதன் 06:31 | பார்வைகள் : 330
இந்தோனேஷியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உடன் நடத்திய பேச்சில், நம்மிடம் இருந்து, 'பிரம்மோஸ்' மற்றும் 'அஸ்திரா' ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் உட்பட, 12 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
பிரதமர் மோடி, மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை நேற்று முன் தினம் தொடங்கினார். முதலில் தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவுக்கு சென்றார். அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ உடன் ஜகார்த்தாவில் பேச்சு நடத்தினார்.
அப்போது இரு நாடுகள் இடையே ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, மருந்து, அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில், 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களின் விபரம்:
ராணுவ துறையில் இந்தோனேஷியாவுக்கு, 'பிரம்மோஸ்' மற்றும் 'அஸ்திரா' ஏவுகணைகளை விற்பனை செய்ய இந்தியா ஒப்புக்கொண்டது. 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கையின் போது, 'அஸ்திரா' ஏவுகணையை நம் ராணுவம் பயன்படுத்தியது. இது வானில் இருந்து ஏவப்பட்டு, வான் இலக்குகளை அழிக்க பயன்பட்டது. மேலும், ராணுவ தொழில்கள், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஏற்கனவே தென் கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கும் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை செய்ய இந்தியா கையெழுத்திட்டு உள்ளது.
கடல்சார் பாதுகாப்பு
கடல்சார் பாதுகாப்பு துறையில், இந்தோனேஷியாவின் சபாங் துறைமுகத்தை இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில் உள்ள இந்த துறைமுகம், உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான மலாக்கா ஜலசந்தியை கண்காணிக்கும் இடமாக உள்ளது.
கிரேட் நிக்கோபார் துறைமுகத் திட்டத்திலிருந்து, 250 கி.மீ., தொலைவில் உள்ளது. எனவே, இது இந்தியா -- இந்தோனேஷியா கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தோ- - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் கடல்சார் துறையில் நீல பொருளாதாரம், கடல்சார் வர்த்தகம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வளர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
அரிய வகை கனிமங்களி ன் வினியோக தொடரை வலுப்படுத்தும் வகையில், இந்தோனேஷியாவில் உருக்கு, நிக்கல், அரிய மண் காந்தங்கள் உற்பத்தியில் இந்தியா முதலீடு செய்ய உள்ளது. மேலும், 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' மற்றும் அரிய மண் காந்தங்கள் தயாரிப்பில் இரு நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல் படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் யு.பி.ஐ., பரிவர்த்தனை முறை, இந்தோனேஷியாவின் பரிவர்த்தனை முறையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் இரு நாட்டு சுற்றுலா பயணியர் பண பரி வர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா -- இந்தோனேஷியா இடையேயான உறவு புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்தை மேலும் வலுப்படுத்தும்.
பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். பிராந்திய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருதலைபட்ச நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மேற்காசிய நிலவரம் குறித்தும் பேச்சு நடத்தினோம். பாலஸ்தீன விவகாரத்தில், நீடித்த அமைதிக்கு இரு நாடுகள் கொள்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தோனேஷியாவின் உயரிய, 'பின்டாங் அடிபுர்னா' விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்த விருதை வழங்கினார். இந்தியா -- இந்தோனேஷியா இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. 1959 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தோனேஷியாவில் ஐ.ஐ.எம்., கிளை இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிங்கசாரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்., -பெங்களூரின் வெளிநாட்டு கிளை அமைக்கப்பட உள்ளது. இந்தியா - இந்தோனேஷியா இடையே நேற்று கையெழுத்தான ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டு, ஐ.ஐ.எம்., -ஆமதாபாத் தன் முதல் வெளிநாட்டு வளாகத்தை துபாயில் துவங்கியது.
இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது: பிரதமர் மோடி
இந்தோனேஷிய பார்லி.,யில், பிரதமர் மோடி ஆற்றிய உரை: இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்கிற நாடே தவிர, ஆக்கிரமிப்பு பாதையில் செல்லும் நாடு அல்ல. சுதந்திரமான, திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இப்பிராந்தியத்தில் தடையற்ற கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்ய விரும்புகிறோம். இந்தியா - இந்தோனேஷியா மக்கள் இணைந்து பயணிக்கும் போது, அது உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதன் மூலம், இந்தோனேஷிய பார்லி.,யில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாங்குகிறது இந்தோனேஷியா
நாட்டின் தேர்தல் முறையை நவீனப்படுத்த நம் நாட்டுடன் இணைந்து செயல்பட இந்தோனேஷியா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, தேர்தல் மேலாண்மை மற்றும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை நம்மிடம் இருந்து வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அந்நாடு கையெழுத்திட உள்ளது. பூடான், நேபாளம், நமீபியா வரிசையில் தற்போது இந்தோனேஷியாவும் இணைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேர்தல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், வாக்காளர் விழிப்புணர்வு, டிஜிட்டல் கருவிகள் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். நம் தேர்தல் கமிஷன் இதுவரை ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, பிஜி, மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட, 28 நாடுகளின் தேர்தல் அமைப்புகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. நம் நாட்டின் தேர்தல் மேலாண்மை அனுபவம், தற்போது ஒரு உலகளாவிய பொது சொத்தாக பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire