கரூர் சம்பவ வழக்கு: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
8 ஆடி 2026 புதன் 08:39 | பார்வைகள் : 219
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு தொடர்பாக, தி.மு.க., ஆட்சியின்போது பதிவான வழக்கில், தற்போதைய தமிழக முதல்வர் விஜய் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் மீது வழக்கு தொடராத நிலையில், இங்கே மனு அளித்தது ஏன்?' என, உச்ச நீதிமன்றம், தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், நீதிபதிகளின் கடும் கண்டனத்தால், தி.மு.க., தரப்பில் இடைக்கால மனு வாபஸ் பெறப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்., 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாகன பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதுதொடர்பான வ ழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, த.வெ.க., சார்பில் தலா, 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், 41 பேரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில், அரசு பணி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் கல்வி தகுதி அடிப்படையில், ஒருவரை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்.
இதற்காக, வரும் 10ம் தேதி, கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் செல்கிறார். சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கழித்து, முதல்வராக செல்லும் விஜய், பாதிக்கப்பட்டோர் இல்லங்களுக்கு நேரில் செல்ல உள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தவும் உள்ளார்.
தொடர்ந்து, கரூர் வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கம் அருகில் நடக்கவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இந்தச் சூழலில் , தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.
தில், 'கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது சாட்சிகளை அச்சுறுத்தும் செயல்.
'வழக்கு, விசாரணையில் இருக்கும்போதே, முதல்வர் விஜய், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசு சார்பில் நிதியுதவி மற்றும்பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
'இந்த செயல் சி.பி.ஐ.,யின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ''கரூர் வழக்கில், முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டப்பட்டவர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, சி.பி.ஐ., விசாரணையை திசை திருப்பும் வகையில் உள்ளது,'' என, வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தி.மு.க., ஆட்சியில் பதிவான வழக்கில், தற்போதைய முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. தயவு செய்து, ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, நீதிமன்றத்தில் பேசுங்கள்' என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முதல்வரின் பயணத்திட்டத்தைக் கூட, உச்ச நீதிமன்றம் தான் நிர்ணயிக்க வேண்டுமா? முதல்வர் மற்றும் அமைச்சர்கள், வழக்கின் தன்மை குறித்து பேச தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்கிறீர்களா? முதல்வரின் நிர்வாக ரீதியிலான உத்தரவுகள், பேச்சுகளை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் என்ன தணிக்கை குழுவா?
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது எப்படி, வழக்கை திசை திருப்புவதாக அமையும்? அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தால், பதிலுக்கு நீங்களும் அரசியல் ரீதியாக பதிலடி கொடுங்கள்.
அதை விடுத்து, உச்ச நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற நினைக்காதீர்கள். உங்கள் சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். கருத்துரிமைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் எங்களால் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், 'இந்த இடைக்கால மனுவை வாபஸ் பெறுகிறீர்களா?' என உச்ச நீதிமன்றம் கேட்ட நிலையில், அதற்கு தி.மு.க., வழக்கறிஞர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, 'கரூர் துயர சம்பவம் தொடர்பாக, சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசிய, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, டில்லி மற்றும் சென்னையில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
தி.மு.க.,வுக்கு ஏன் பயம்?
முதல்வர் விஜய், கரூருக்கு சென்றால் தி.மு.க.,வுக்கு ஏன் இவ்வளவு பயம் வருகிறது. முதல்வர் அங்கு போகக் கூடாது என இவர்கள் ஏன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். முதல்வர் அங்கு சென்றால், அங்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவந்துவிடும். அதனால் தான் தி.மு.க., பயப்படுகிறது. இவர்கள், சட்டம் தெரியாமல் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
நிர்மல்குமார் சட்டத்துறை அமைச்சர், த.வெ.க.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு, அரசு வேலை வழங்க கூடாது என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது. இதற்கு, பெண்கள், அரசு ஊழியர்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை தலைமை செயலக ஊழியர் ஒருவர் கூறியதாவது:
அரசு பணி என்பது பலரது கனவு. அந்த கனவு மெய்ப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு பயிற்சிகளை எடுக்கின்றனர். இரவு, பகல் துாக்கம் இல்லாமல், கண் விழித்து தேர்வு எழுதுகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் எழுதும் தேர்வில், நுாற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். 'கரூர் பிரசாரத்திற்கு வர வேண்டாம்' என்று த.வெ.க., தலைமை அறிவுறுத்தியும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பலர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, கட்சி தலைமை ஏற்பாட்டில் நிவாரணம் வழங்கலாம்; தொழில் துவங்க உதவலாம். கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதை ஏற்க இயலாது. அதை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire