Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் 2029க்குள் செயல்படுத்த முடிவு

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் 2029க்குள் செயல்படுத்த முடிவு

11 ஆடி 2026 சனி 09:21 | பார்வைகள் : 139


லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை, 2029க்குள் முழுமையாக செயல்படுத்தும் வகையில், அதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் பார்லி., கூட்டுக்குழு தீவிரம் காட்டி வருவதாக அதன் தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது குறித்து ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய இந்த குழு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, 2024 டிசம்பரில் நடந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, அரசியலமைப்பு 129-வது திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பார்லி., கூட்டுக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. தொடர்ந்து, அக்குழுவின் தலைவராக ராஜஸ்தானின் பாலி தொகுதி பா.ஜ., - எம்.பி., பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டார். பல்வேறு தரப்பினரிடம் ஆலோசித்து கருத்துக்களை கூட்டுக்குழு கேட்டு வருகிறது.

அந்த வகையில், பா.ஜ., ஆளும் கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அம்மாநில அமைச்சர்களை, பி.பி.சவுத்ரி தலைமையிலான பார்லி., கூட்டுக்குழுவினர் நேற்று சந்தித்து பேசினர்.

இதன் பின், பி.பி.சவுத்ரி கூறியதாவது:

குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களில், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டோம். இதில், 99 சதவீதம் பேர், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை, 2029 லோக்சபா தேர்தலுக்குள் செயல்படுத்த இலக்கு வைத்துள்ளோம். சில மாநில அரசுகள் விருப்பத்துடன் ஒத்துழைத்தால், அவற்றையும் இந்த தேர்தல் சுழற்சிக்குள் கொண்டு வருவோம். தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் நாட்டுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் இந்த இழப்பை தடுத்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும். மேலும், அடிக்கடி தேர்தல் நடப்பது நிர்வாக செயல்பாடுகளை பாதிப்பதோடு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒருவேளை, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம், 2029 லோக்சபா தேர்தலில் அமலாகும் பட்சத்தில், தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, ஹிமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களும், 2029ல் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

2028ல் தேர்தலை சந்திக்க உள்ள திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த உடன், 2029ல், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் நடைமுறைக்கு வரும் வரை, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.