Paristamil Navigation Paristamil advert login

பா.ம.க.,வில் மீண்டும் பஞ்சாயத்து ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணியை ஏற்க மறுப்பு!

பா.ம.க.,வில் மீண்டும் பஞ்சாயத்து ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணியை ஏற்க மறுப்பு!

12 ஆடி 2026 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 153


ராமதாசுடன் சமாதானம் ஆனாலும், ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி ஆகியோரை, பா.ம.க., தலைவர் அன்புமணி ஏற்க மறுப்பதால், அக்கட்சியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2024 டிசம்பர் 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் வெடித்தது.

இதனால், இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நேருக்கு நேர் மோதினர்.

அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி தலைமையிலான பா.ம.க., நான்கு இடங்களில் வென்றது.

கட்சி முழுமையாக அன்புமணியின் கட்டுக்குள் வந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 24ம் தேதி, ராமதாசின் 61வது திருமண நாளன்று, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்ற அன்புமணி, ராமதாசிடம் ஆசி பெற்றார். மகனை கட்டியணைத்து, ராமதாஸ் கண்ணீர் சிந்தியது, பா.ம.க.,வினரை நெகிழச் செய்தது.

பா.ம.க.,வையும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை, அன்பு மணியிடம் ராமதாஸ் ஒப்படைத்ததாக கூறப்பட்டது.

ஆனால், இதை ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்டோர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று, தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்திற்கு அன்புமணி ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ராமதாசால் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட முரளிசங்கர் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

ஆனால், ராமதாசால் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி, அருள் உள்ளிட்ட சிலர் அழைக்கப்படவில்லை.

இதனால், நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக, முரளிசங்கர் உள்ளிட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம், ராமதாசை நேரில் சந்தித்த ஸ்ரீகாந்தி, 'நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு துணையாக இருந்தோம்.

செயல் தலைவர் பதவி கொடுத்ததால், பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தேன். கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் பலர் எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்படி என்னையும், எனக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் நட்டாற்றில் விடலாமா, இது நியாயமா' என்று, கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட குழப்பங்களால், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி ரத்து செய்தார். தந்தையும், மகனும் இணைந்துவிட்ட போதும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அக்கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.