Paristamil Navigation Paristamil advert login

மருத்துவ உதவியுடன் கருணைக் கொலைச் சட்டம்: தேசிய சபையில் இறுதி அங்கீகாரம்!!

மருத்துவ உதவியுடன்  கருணைக் கொலைச் சட்டம்: தேசிய சபையில் இறுதி அங்கீகாரம்!!

15 ஆடி 2026 புதன் 21:15 | பார்வைகள் : 302


"கருணைக் கொலை" (Aide à mourir)  சட்ட முன்மொழிவு தேசிய சபையில் இன்று 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் 291 ஆதரவு வாக்குகளும் 241 எதிர்ப்பு வாக்குகளும் பெற்று இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் உதவியுடன் மரணத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் பிரான்சும் இணைந்துள்ளது. பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் உருகுவே போன்ற நாடுகளில் ஏற்கனவே இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்தச் சீர்திருத்த முயற்சியை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 2022 ஆம் ஆண்டில் தொடங்கியிருந்தார். 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற கலைப்பு காரணமாக அரசின் முதல் சட்டமூலம் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னர் நிவாரண சிகிச்சை மற்றும் இறப்பிற்கு உதவும் உரிமை தொடர்பான இரண்டு தனித்தனி சட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. பல்வேறு அரசியல் எதிர்ப்புகளையும் மீறி அவை முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய சட்டத்தின் படி, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு உயிர் ஆபத்தில் உள்ள, மேலும் தமது விருப்பத்தை தெளிவாகவும் சுயமாகவும் வெளிப்படுத்தக்கூடிய வயது வந்த நோயாளிகளுக்கே இந்த உரிமை வழங்கப்படும். தகுதி தொடர்பாக மருத்துவர் மற்றும் மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

நோயாளி எந்த நேரத்திலும் தனது முடிவை மாற்றிக் கொள்ளும் உரிமையைக் கொண்டிருப்பதுடன், பொதுவாக உயிர் முடிவுக்கான மருந்தை அவர் தாமே பயன்படுத்த வேண்டும். அதற்கு உடல் ரீதியாக இயலாத சூழலில் மருத்துவர் அல்லது செவிலியர் உதவ முடியும். இதேவேளை, இந்நடவடிக்கையில் பங்கேற்க விரும்பாத சுகாதாரப் பணியாளர்கள் மனச்சாட்சி விதிவிலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.