Paristamil Navigation Paristamil advert login

பரசிட்டமோல் விலையை குறைக்க அரசு திட்டம்!!

பரசிட்டமோல் விலையை குறைக்க அரசு திட்டம்!!

17 ஆடி 2026 வெள்ளி 15:17 | பார்வைகள் : 199


அரசு பரசிட்டமோல் மருந்தின் விலையை ஒவ்வொரு பெட்டிக்கும் 10 சென்ட் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் யூரோக்களை la Sécurité sociale சேமிக்க முடியும். இந்த மாற்றம் பொதுமக்களுக்கு மருந்து விலையை குறைக்கும் என்றாலும், மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்தகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்த விலைக் குறைப்பு பிரான்சில் பரசிட்டமால் உற்பத்தியை மீண்டும் வளர்க்கும் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. Opella, Upsa மற்றும் Seqens நிறுவனங்கள் இணைந்து 2027 முதல் பிரான்சிலேயே பரசிட்டமோல் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக அரசு உட்பட மொத்தம் 140 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பரசிட்டமோலின் மூலப்பொருளை பிரான்சில் தயாரிப்பது ஆசிய நாடுகளை விட சுமார் 60% அதிக செலவாகும். எனவே, முதலீட்டை ஈடு செய்ய மருந்து விலையை உயர்த்த வேண்டிய நிலையில், அரசு அதற்கு மாறாக விலையை குறைக்க முயற்சிப்பது பொருளாதார ரீதியாக பொருத்தமற்றது என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மருந்தக சங்கத் தலைவர் பிலிப் பெஸ்ஸே இந்த முடிவு நாட்டின் மருந்து தன்னிறைவு மற்றும் மருந்து கிடைப்பை பாதிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார். மேலும், ஏற்கனவே நிதிச் சிக்கலில் உள்ள மருந்தகங்களின் வருமானமும் குறைந்து, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.