கூடுதல் நிதி ஒதுக்கிய குற்றச்சாட்டு: மேயர் பிரியா அறிவித்த திட்டங்களின் மதிப்பீடு மறு ஆய்வு
22 ஆடி 2026 புதன் 12:16 | பார்வைகள் : 408
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் போது, மேயர் பிரியா அறிவித்த, 90 திட்டங்களின் மதிப்பை மறு ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செலவை காட்டிலும் கூடுதலாக நிதி ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியின், 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சியின் மொத்த வரவு, 7,717 கோடி ரூபாய்; மொத்த செலவு, 9,319 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. இதன் வாயிலாக, மாநகராட்சி பட்ஜெட்டில், 1,602 கோடி ரூபாய் வரை நிதி பற்றாக்குறை ஏற்படும் என, அறிவிக்கப்பட்டது.
அத்துடன், உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவற்றின் வாயிலாக, இதுவரை 2,000 கோடி ரூபாய் மாநகராட்சி கடன் பெற்றுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 95.20 கோடி ரூபாயை வட்டியாக செலுத்துகிறது.
மேலும், தி.மு.க., ஆட்சியில், மூலதன நிதி அளவுக்கு அதிகமாக செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பணியாளர்களுக்கு சம்பளம் போட முடியாத அளவிற்கு, மாநகராட்சி நிதி நெருக்கடியில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலின் போது, மேயர் பிரியா 90 திட்டங்களை அறிவித்தார். அந்த திட்டங்களின் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்ய, த.வெ.க., அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், மேயர் பிரியா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை.
அதேநேரம், தி.மு.க., ஆட்சியில், பல பணிகளுக்கு கூடுதலாக தொகை ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, 300 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு மேம்பாலம் கட்ட முடியும் என்றால், 375 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். அதனால் தான், 800 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்த பணிகள் ரத்து செய்யப்பட்டு, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
அதேபோல், மேயர் பிரியா அறிவிப்பில், 100 பள்ளிகளுக்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 'பிரின்டர்' இயந்திரம் வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
த.வெ.க., ஆட்சி மாறியதும், 22.12 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 பிரின்டர் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, பள்ளி களுக்கு வழங்கப்பட்டன. இதில், 38 லட்சம் ரூபாய் வரை மிச்சமாகியுள்ளது.
அதேபோல், மேயர் அறிவித்த பல திட்டங்களின் மதிப்பீடு கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேயர் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்; அதே நேரம், ஒதுக்கப்படும் தொகை மட்டும் மறு ஆய்வு செய்யப்பட்டு, மதிப்பீடு இறுதி செய்யப்படும். இதன் வாயிலாக, மாநகராட்சியின் செலவினம் குறைக்கப்பட்டு, நிதி பற்றாக்குறையும் பெருமளவு குறைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire