Paristamil Navigation Paristamil advert login

பொது ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களுக்கு கடும் கட்டுப்பாடு: 'Ripost' சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் இறுதி ஒப்புதல்!!

பொது ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களுக்கு கடும் கட்டுப்பாடு: 'Ripost' சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் இறுதி ஒப்புதல்!!

22 ஆடி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 270


பொது ஒழுங்கை பாதிக்கும் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட "Ripost" சட்ட மசோதா, ஜூலை மாதம் 21 ஆம் திகதி இரவு பாராளுமன்றத்தில் இறுதியாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் Free parties, Protoxyde d'azote (சிரிப்பு வாயு) பயன்பாடு மற்றும் Rodéos urbains (ஆபத்தான மோட்டார் வாகன சாகசங்கள்) ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உள்துறை அமைச்சர் Laurent Nuñez, இது சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களையும் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கும் என தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு Protoxyde d'azote விற்பனை தடை செய்யப்படுகிறது. மேலும், அதை சுவாசிப்பதும், அதன் தாக்கத்தில் வாகனம் ஓட்டுவதும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனுமதியற்ற Free parties-ஐ ஏற்பாடு செய்வதும், அதில் பங்கேற்பதும் தனித்தனி குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. Rodéos urbains தொடர்பான குற்றங்களுக்கு விரைவாக அபராதம் விதிக்கும் வகையில் 800 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அபராதமும் 200 யூரோக்களில் இருந்து 500 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும், விளையாட்டு அரங்குகளுக்கான நிர்வாகத் தடைகளை விரிவுபடுத்தும் அரசு முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. வணிக வளாகங்களில் அல்கோரிதம் அடிப்படையிலான காணொளி கண்காணிப்பை சோதனை முறையில் அறிமுகப்படுத்தும் திட்டமும் ஏற்கப்படவில்லை. இதேவேளை, இந்தச் சட்டம் தேவையற்ற பல அம்சங்களை உள்ளடக்கியதுடன், குடிமக்களின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடியது என்று சில எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.