Paristamil Navigation Paristamil advert login

ஜந்தர் மந்தர் போராட்ட தளத்தை ஏன் மூடக்கூடாது? மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி

ஜந்தர் மந்தர் போராட்ட தளத்தை ஏன் மூடக்கூடாது? மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி

8 ஆவணி 2026 சனி 07:34 | பார்வைகள் : 381


டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ச்சியாக நடக்கும் போராட்டங்கள் குறித்து விசாரணை நடத்திய டில்லி ஐகோர்ட், 'ஜந்தர் மந்தரில் உள்ள போராட்ட தளத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது?' என, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அகில இந்திய தலித் கிறிஸ்துவர் உரிமைகள் பாதுகாப்புக் குழு சார்பில், டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது எந்தவித முடிவும் எடுக்காமல் டில்லி போலீசார் நிலுவையில் வைத்துள்ளதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி அமித் மகாஜன் முன் இன்று (ஆகஸ்ட் 07) விசாரணைக்கு வந்தது. அப்போது நகரின் மையப்பகுதியில் நடக்கும் தொடர் போராட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீதிபதி கவலை தெரிவித்தார்.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி அமித் மகாஜன், ''நகரின் மையப்பகுதியில் நடக்கும் இத்தகைய போராட்டங்களால் பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகக் கூடாது. நகரத்தை இவ்வாறு பணயமாக வைக்க அனுமதிக்க முடியாது,'' என, தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, ''ஜந்தர் மந்தர் போன்ற நகரின் முக்கிய இடங்களில் போராட்டங்களை நடத்த அனுமதிப்பது உண்மையிலேயே அவசியம்தானா? என்பது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அந்த போராட்ட தளத்தை முழுமையாக மூடுவது குறித்து மத்திய அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது?'' என, கேள்வி எழுப்பினார்.