Paristamil Navigation Paristamil advert login

எத்தனால் கலந்த பெட்ரோலை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்!

எத்தனால் கலந்த பெட்ரோலை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்!

9 ஆவணி 2026 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 455


வாடிக்கையாளர்கள், '20 சதவீதம் எத்தனால் கலந்த  பெட்ரோலை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். பெட்ரோலின் தரம், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்குள் தொடர்ந்து இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது' என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: 'இ20' எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோலில், ஈரப்பதம் மற்றும் குளோரைடு இருப்பதாக, சமீபத்தில் வெளியான செய்திகளை தொடர்ந்து, நாடு முழுதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகளின் முடிவுகள், எரிபொருளின் தரம், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்குள் தொடர்ந்து இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளன. அறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட, 'ரேண்டம்' எனப்படும், விரிவான சீரற்ற மாதிரி சோதனைகள் அடிப்படையில், எரிபொருள் மாசுபாடு குறித்து அச்சப்பட வேண்டிய எந்த காரணமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு, பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலில் குளோரைடு அளவிற்கு கடுமையான தரநிலைகளை நிர்ணயித்துள்ளது. இதை உறுதிப்படுத்த சுத்திகரிப்பு நிலையங்கள், எத்தனால் உற்பத்தி நிலையங்கள், 'டிப்போ'க்கள், முனையங்கள், பெட்ரோல் பங்க்குகள் என, அனைத்து நிலைகளிலும் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள தரக்கண்காணிப்பு முறைகளுடன் சேர்த்து, அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் தினமும், 8 முதல், 12 முறை தண்ணீர் புகுதல் மற்றும் அடர்த்தி சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சோதனை முடிவுகள், தனித்தனி எரிபொருள் ஆய்வகங்களில் சரிபார்க்கப்பட்டு, மிக உயர்ந்த தரநிலைகள் உறுதி செய்யப்படுகின்றன. இந்த பலகட்ட சோதனை முறைகள், வினியோக சங்கிலி முழுதும் எரிபொருளின் உயர் தரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

நாடு முழுதும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெட்ரோல் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றிலும், குளோரைடு அளவு, 1 பி.பி.எம்., அல்லது அதற்கு குறைவாக இருந்தது. இது, இந்தியாவின் வலுவான சுத்திகரிப்பு மற்றும் வினியோக தரக்கட்டுப்பாடு அமைப்பு சிறப்பாக செயல்படுவதை காட்டுகிறது.

பெட்ரோலுடன் கலக்கப்படும் முக்கிய கூறான எத்தனால் மாதிரிகளிலும் குளோரைடு அளவு நிர்ணயிக்கப்பட்ட தரநிலையை விட, மிகவும் குறைவாக இருந்தது. எண்ணெய் நிறுவனங்களை உள்ளடக்கிய சிறப்பு குழு, கடந்த, 10 நாட்களில் நாடு முழுதும் உள்ள, 80 எத்தனால் உற்பத்தி நிலையங்களில் இருந்து மாதிரிகளை ஆய்வு செய்தது.

அனைத்து மாதிரிகளிலும் குளோரைடு அளவு, 3 பி.பி.எம்.,க்கும் குறைவாகவே இருந்தது. டிப்போக்கள், முனையங்களில் பரிசோதிக்கப்பட்ட எத்தனால் மற்றும் எத்தனால் கலந்த பெட்ரோல் மாதிரிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட குளோரைடு வரம்பிற்குள் இருந்தன.

தீவிர கண்காணிப்பின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட மாதிரிகளில், இதுவரை ஆய்வு செய்யப்பட்ட, 160 அறிக்கைகளில் குளோரைடு அளவு பூஜ்ஜியம் முதல், 3 பி.பி.எம்., வரையிலேயே இருந்தது. சிலர் கூறியபடி, பல நுாறு பி.பி.எம்., அளவு குளோரைடு எங்கும் பதிவாகவில்லை.

நாடு முழுவதும், 90,000 பெட்ரோல் பங்க்குகளில், நிலத்தடி சேமிப்பு தொட்டிகள் கட்டாயமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிலையத்திலும் தினமும், 8 முதல், 12 முறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை எந்த பங்க்கிலும் தண்ணீர் புகுந்ததற்கான ஆதாரம் கண்டறியப்படவில்லை.

எனவே, வாடிக்கையாளர்கள், 'இ20' பெட்ரோலை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படும், 'இ20' பெட்ரோல், அரசால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தரநிலைகளுக்கும் முழுவதுமாக இணங்குகிறது. இது, வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வலுவான தர உறுதி மற்றும் கண்காணிப்பு அமைப்புகளால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.