Paristamil Navigation Paristamil advert login

தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இல்லையேல் வெளிநாடுகளுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்! ஸ்ரீதர் வேம்பு

தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இல்லையேல் வெளிநாடுகளுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்! ஸ்ரீதர் வேம்பு

10 ஆவணி 2026 திங்கள் 11:27 | பார்வைகள் : 302


தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், வெளிநாடுகளுக்கு நாம் கப்பம் கட்ட வேண்டியிருக்கும்,'' என, 'ஸோஹோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேசினார்.

'கோவை சுதேசி எக்ஸ்போ மற்றும் உணவுத்திருவிழா', கோவை, ஈச்சனாரி, ரத்தினம் கிராண்ட் ஹாலில் நேற்று தொடங்கி, நாளை  நிறைவடைகிறது.

இரண்டாம் நாளான இன்று, 'பெண்களின் முன்னேற்றம்' என்ற மாநாடு நடந்தது. இதில், ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேசியதாவது:

மென்பொருள் நிறுவனங்களில் பெரிய புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. 100 பேர் செய்யும் வேலையை மென்பொருள் உதவியுடன் இன்று ஐந்து பேர் செய்கின்றனர். அதேசமயம், அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை வைத்து வேலை செய்ய மாட்டார்கள்.

வருமான வரி செலுத்துவதற்கு ஏ.ஐ., பயன்படுத்தி ஏதேனும் சிறு தவறு நடந்தாலும் இழப்புதான். அதேபோல், மருத்துவர்கள் செய்யும் வேலையிலும் ஏ.ஐ., இருக்க வாய்ப்பு குறைவு; மற்ற எல்லா துறைகளிலும் ஏஐ நுழைந்துவிட்டது. இந்த ஏ.ஐ., அலையானது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பின் ஓய்ந்துவிடும்.

இன்னும், 10, 15 ஆண்டுகளில் ஏ.ஐ., பற்றி யோசிக்கமாட்டார்கள். ஏ.ஐ.,க்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லா தொழில்நுட்பமும், அனைவரது கையிலும் இருக்கும்போது மனிதர் வேலைவாய்ப்பு குறையும் வாய்ப்புள்ளது. அதேசமயம், நான்கு விஷயங்களில் ஏ.ஐ., பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.

முதலில் இயற்கை. விவசாயத்தை இயற்கையுடன் உடன்பாடு இல்லாமல் செய்து வருகிறோம். அதிக ஆழத்தில் 'போர்வெல்' போடுவதால், பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறோம். எனவே, குளம், குட்டை வெட்டி, தண்ணீர் தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது, குழந்தை வளர்ப்பு, முதியோரை பராமரிப்பது.இவ்விரு விஷயத்தில் மனிதர்கள் மட்டுமே ஈடுபட வேண்டும். ரோபோ, ஏ.ஐ., பயன்படுத்தினால் நன்றாக இருக்காது.

மூன்றாவது கலாசாரம். பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்டவையும் நமது கலாசாரங்களில் ஒன்று. இதில், ஏ.ஐ., கூடாது.

நான்காவது வேதம். அதாவது, கோவில்களுக்கு செல்லும்போது ஏ.ஐ., ரோபோ அழைத்துசெல்ல முடியுமா? எனவே, இந்த நான்கு விஷயங்களில் மனிதர்கள்தான் ஈடுபட வேண்டும்; இதில், 70 சதவீதம் பெண்கள்தான் இருப்பர். அதற்கான வேலையை செய்துவருகிறோம்.

சுதேசியை பொறுத்தவரை தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், வெளிநாடுகளுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். 'வாட்ஸாப்' பயன்பாட்டுக்காக நம் நாடு, 30,000 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு செலவழித்துள்ளது.

அதற்குதான் நம் நாட்டில் உருவாக்கப்படும், 'அரட்டை' போன்ற செயலிகள் வாயிலாக, 3,000 கோடியாக குறைக்க நாம் பாடுபடுகிறோம். இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதே சுதேசி.இவ்வாறு, அவர் பேசினார்.