Paristamil Navigation Paristamil advert login

பிளாஸ்டிக்கையே சிதைக்கும் பூஞ்சை - குப்பை மேட்டில் ஒரு அரிய கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக்கையே சிதைக்கும் பூஞ்சை - குப்பை மேட்டில் ஒரு அரிய கண்டுபிடிப்பு

10 ஆவணி 2026 திங்கள் 14:02 | பார்வைகள் : 221


மண்ணில் மட்காமல் நீண்ட காலம் கிடந்து மண் மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கையே சிதைக்கக்கூடிய பூஞ்சை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள், இயற்கையாக மண்ணில் மட்காமல் நீண்ட காலம் கிடக்கும் விடயம், மனித குலத்துக்கு பெரும் தொல்லையாக காணப்படும் நிலையில், பிளாஸ்டிக்கையே சிதைக்கக்கூடிய பூஞ்சை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பாகிஸ்தான் மற்றும் சீன அறிவியலாளர்கள், பிளாஸ்டிக்கையே மக்கச் செய்யும் பூஞ்சை ஏதாவது உள்ளதா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவந்துள்ளார்கள்.

அதற்காக ஆய்வு மேற்கொள்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாதில் உள்ள குப்பை மேடு ஒன்று!

அந்தக் குப்பை மேட்டில் கிடந்த பிளாஸ்டிக் போத்தல்களை சிதைக்கக்கூடிய ஏதாவது பூஞ்சை உள்ளதா என்னும் ஆய்வில் அவர்கள் ஈடுபட, அப்படி ஒரு பூஞ்சை உண்மையாகவே உள்ளதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆஸ்பெர்ஜில்லஸ் டியூபிங்கென்சிஸ் (Aspergillus tubingensis) என்னும் பூஞ்சையால், கடினமான பிளாஸ்டிக்கான Polyurethane என்னும் பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் சிதைக்கமுடியும் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த பூஞ்சை பிளாஸ்டிக் மீது வளரும்போது அந்த பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் காணாமல்போகச் செய்துவிடும் என்று பொருள் இல்லை.

இந்த Polyurethane என்னும் பிளாஸ்டிக், தோல் பொருட்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் தோல் போலவே காணப்படும் செயற்கை தோல் (synthetic leather) காலணிகள், தண்ணீர் புகாத மழை கோட்கள், மெத்தைகள் போன்றவற்றின்மீது பூசப்படுகிறது.

அப்படியிருக்கும்பட்சத்தில், இந்த வகை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் சிதைக்குமானால், இரண்டு மாதங்களில் பூஞ்சை படர்ந்த காலணிகளும், மழை கோட்களும் மாயமாகிவிடும்.

ஆக, விடயம் அப்படியல்ல, அந்த பூஞ்சை உருவாக்கும் ஒருவித என்சைம், இந்த பிளாஸ்டிக்கை சிதைக்க காரணமாக அமைந்துள்ளது என்பதுதான் பொருள்.

மேற்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம், அந்த என்சைமை ஆய்வாளர்கள் தனியாக பிரித்தெடுக்கும் நிலையில், அதை பெருமளவில் தயாரித்து, மட்காத பிளாஸ்டிக்கை மட்கச் செய்வதற்காக பயன்படுத்தமுடியும் என்பதுதான் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.