Paristamil Navigation Paristamil advert login

Berck-sur-Mer: புலம்பெயர்வோரின் பெரும் வருகையால் மீட்புப் படையினர் திணறல்!!

Berck-sur-Mer: புலம்பெயர்வோரின் பெரும் வருகையால் மீட்புப் படையினர் திணறல்!!

11 ஆவணி 2026 செவ்வாய் 16:15 | பார்வைகள் : 325


ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை,  Berck-sur-Mer கடற்கரையிலிருந்து ஒரே சிறிய படகில் 230 புலம்பெயர்வோர் பிரித்தானிய கால்வாயைக் கடந்து இங்கிலாந்தை சென்றடைந்துள்ளனர். ஒரே படகில் இவ்வளவு அதிகமானோர் சென்றது இதுவரை இல்லாத சாதனையாகும். இதனால், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளும் அதிகரித்து வருவது குறித்து மீட்புப் படையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, ஒரு மிகப்பெரிய Zodiac படகு Berck-sur-Mer கடற்கரையை ஒட்டி சென்றுகொண்டிருந்தபோது, மணற்குன்றுகளிலிருந்து சுமார் 150 முதல் 200 பேர் வரை கடலில் இறங்கி நீந்தி அந்தப் படகை அடைய முயன்றனர். இந்த காட்சியைப் பார்த்த கடல் மீட்புப் படையினரின் தலைவர் Jean-Marc Lamblin, அங்கு இருந்த மக்களின் எண்ணிக்கையைக் கூட கணக்கிட முடியாத அளவுக்கு அவர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்ததாக தெரிவித்தார்.

மொத்தம் 230 பேர் படகில் ஏறியதால், படகு மிகுந்த சுமைக்கு உள்ளானது. படகின் முன்பகுதி வளைந்து, அதிக அளவில் கடல்நீர் உள்ளே புகுந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். இருப்பினும், அந்தப் படகு சுமார் 6 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இங்கிலாந்து கடற்பரப்பை சென்றடைந்தது.

சில வாரங்களுக்கு முன்பு ஒரே படகில் 150 முதல் 170 பேர் வரை சென்றதே அதிகபட்சம் என நினைத்திருந்த நிலையில், தற்போது 230 பேர் சென்றிருப்பது மீட்புப் பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வளவு அதிகமானோர் பயணிக்கும் படகு கடலில் கவிழ்ந்தால், அனைவரையும் மீட்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.