இஸ்ரோவின் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை
12 ஆவணி 2026 புதன் 11:34 | பார்வைகள் : 156
தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில், 950 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும், 'இஸ்ரோ'வின் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தளத்தை இயக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு ஜி.எஸ்.எல்.வி., - பி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும் என்பதால், பல நாடுகள், இஸ்ரோ வாயிலாக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் தேர்வானது.
பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருப்பதால், இங்கு இருந்து ராக்கெட்டுகளை குறைந்த எரிபொருள் செலவில் விண்வெளிக்கு செலுத்த முடியும். எனவே, குலசேகரன்பட்டினத்தில், 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2024ல் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்துக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ராக்கெட் ஏவுதளம், ராக்கெட் பணிமனை போன்றவை இங்கு கட்டப்பட்டுள்ளன. 950 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் சிறிய ராக்கெட் ஏவுதளத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இதன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கையை 'இன் - ஸ்பேஸ்' எனப்படும், இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனம் ஏவுதளத்தை இயக்கி, வணிக ரீதியிலான ஏவுதல் சேவைகளை வழங்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல், பயிற்சி உள்ளிட்ட உதவிகளை இஸ்ரோ வழங்கும். மூன்று ஏவுதல் சேவை நிறைவடையும் வரையிலோ அல்லது ஓராண்டு வரையிலோ இஸ்ரோவின் உதவி நீட்டிக்கப்படும்.
இந்த வாய்ப்பை பெறும் நிறுவனங்களுக்கு கடுமையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதாவது தேர்வாகும் இந்திய நிறுவனம் குறைந்தது ஏழு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்து இருக்க வேண்டும். ஏழு ஆண்டுகளில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனை அல்லது வருவாய் பெற்றிருக்க வேண்டும்.
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தை தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம், மேம்பட்ட விண்வெளி திட்டங்களுக்கு, இஸ்ரோவால் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறப்படுகிறது.
குலசேகரன்பட்டினம் சிறப்பம்சங்கள்:
* ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் இலங்கை வான்பரப்பை தவிர்க்க சற்று வளைத்து அனுப்பப்படுகின்றன
* குலசேகரன்பட்டினத்தில் அந்த அவசியம் இருக்காது. நேரடியாகவே தெற்கு நோக்கி ராக்கெட்டை செலுத்த முடியும்
* இதனால், எரிபொருள் பயன்பாடு குறைவதுடன், அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவுவதற்கும் வாய்ப்பு அதிகரிக்கும்
* இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனமான எஸ்.எஸ்.எல்.வி., மட்டுமின்றி, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின், 'விக்ரம்-1', 'அக்னிகுல் காஸ்மோஸ்' நிறுவனத்தின், 'அக்னிபான்' போன்ற தனியார் ராக்கெட்டுகளையும் இங்கிருந்து ஏவ முடியும்
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire