Paristamil Navigation Paristamil advert login

மத்திய அரசு சட்டங்களை எதிர்த்து விஜய் தீர்மானம்

மத்திய அரசு சட்டங்களை எதிர்த்து விஜய் தீர்மானம்

12 ஆவணி 2026 புதன் 12:45 | பார்வைகள் : 257


மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டசபையில் நேற்று ஒரே நாளில் இரண்டு தீர்மானங்களை, முதல்வர் விஜய் அரசு நிறைவேற்றியது. எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரியும், 'நீட்' நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.

சட்டசபையில் நேற்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்த தனி தீர்மானம்:


மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது என, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு, நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறது.

வரம்பின்றி அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் அதிகரிக்கவும் நீட் தேர்வு வழி வகுத்துள்ளது.

பள்ளி பாடத்திட்டத்தை பயில்வதில் இருந்து, மாணவர்களின் கவனத்தை திசை திருப்பி, நீட் பயிற்சியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துகிறது. 12 ஆண்டு கால பள்ளிகல்வியை புறந்தள்ளி, ஒரு நாள் நுழைவுத்தேர்வே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, 2021ல் சட்ட சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனா லும், ஜனாதிபதியால் இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால், இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு நடத்தப்பட்டது. எனவே, நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வகையில், 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2020ம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணைய சட்டம், 2020ம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய சட்டம் மற்றும் தொடர்புடைய பிற மைய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதன் வாயிலாக, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா தொடர்பாக,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த தீர்மானம்:

தொண்டு நிறுவனங்களின் எப்.சி.ஆர்.ஏ., பதிவு புதுப்பிக்கப்படாமல் காலாவதியானாலோ, ரத்து செய்யப்பட்டாலோ, அதன் சொத்துக்களை அரசு கையகப்படுத்த, எப்.சி.ஆர்.ஏ., சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. இது குறித்து, தமிழக சட்டசபை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

இது, தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியை, குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல் பாடுகளை பாதிக்கக் கூடும். எனவே, தற்போதைய வடிவிலான, 2016ம் ஆண்டு எப்.சி.ஆர்.ஏ., திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இது தொடர்பாக, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு களுடனும், மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்.எந்த ஒரு சட்ட மசோதாவும், இயற்கை நீதி, விகிதாச்சாரம், சொத்துரிமை பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு, கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

த.வெ.க., அரசு கொண்டு வந்த இந்த இரண்டு தீர்மானங்களையும், எதிர்க்கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்தனர்.

மேலும், காங்கிரஸ், பா.ம.க., - வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி போன்றவவையும் ஆதரித்தன. இதையடுத்து, இரு தீர்மானங்களும் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டன.

பா.ஜ., வெளிநடப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்த்து, பா.ஜ.,வின் ஒரே எம்.எல்.ஏ.,வான போஜராஜன் மட்டும் வெளிநடப்பு செய்தார். எப்.சி.ஆர்.ஏ., சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கும், அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, தேச நலனுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே, எப்.சி.ஆர்.ஏ., சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும்; வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை நீட் தேர்வு ஏற்படுத்தி தருகிறது; பணம் இருந்தால் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியுள்ளது. நீட் தேர்வு தமிழகத்திற்கு நல்லது. நீட் தேர்வை எதிர்ப்பது, அறிவுத்திறன் கொண்ட தமிழக மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். எனவே, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொண்டு நிறுவனங்களுக்கு ஆபத்தில்லை!

எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா - 2026ன் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு கொண்டு வந்துள்ள எப்.சி.ஆர்.ஏ., பதிவு ரத்தானாலோ, புதுப்பிக்கப்படாமல் போனாலோ, அந்நிறுவனங்களின் சொத்துக்களை நிர்வகிக்க, விற்க, மத்திய அரசு தனியாக ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

*எப்.சி.ஆர்.ஏ., பதிவு ரத்தானால், தொண்டு நிறுவனங்கள் உடனடியாக மூடப்படும் என்பது தவறான புரிதலாகும்

*இந்த அனுமதி ரத்தானால், வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை மட்டுமே தொண்டு நிறுவனம் இழக்கும்

*சங்கம், அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவன சட்டங்களின் அடிப்படையில் அந்த அமைப்புகள் தொடர்ந்து இயங்கலாம்

*உள்நாட்டு நன்கொடைகள், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதி, உறுப்பினர் களின் பங்களிப்பு ஆகியவற்றை கொண்டு பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் காப்பகங்களை தொடர்ந்து நடத்த முடியும்

*எப்.சி.ஆர்.ஏ., பதிவு காலாவதியாகும் பட்சத்தில், வெளிநாட்டு நன்கொடை மூலம் உருவாக்கப் பட்ட பள்ளி கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகளிர் தங்கும் விடுதிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்கள், அரசால் நியமிக்கப்பட்ட புதிய அதிகாரம் கொண்ட அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்துவிடும்

*அதே சமயம், முற்றிலும் உள்நாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை, அரசு தன்னிச்சையாக பறிமுதல் செய்ய முடியாது

*பல தொண்டு நிறுவனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நன்கொடைகளை கலந்து சொத்துக்களை உருவாக்கி இருப்பதால், அவற்றை பிரித்து அறிவதில் சிக்கல் நீடிக்கிறது

*தொண்டு நிறுவனங்கள் முடங்கினாலும், உரிமத்தை இழந்தாலும், வெளிநாட்டு நன்கொடையில் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது

*வெளிநாட்டு நிதியில் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் முறையாக கண்காணிக்கப்படவும், தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவும் இந்த சட்ட திருத்தம் அவசியம் என்கிறது மத்திய அரசு

மசோதாவை பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்ப திட்டம்?

வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை, பார்லி மென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்., - சமாஜ்வாதி - தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகின்றன.

அதே சமயம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், மசோதாவை மறு ஆய்வுக்காக பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பலாம் என யோசனை தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக, மத்திய அரசு இன்று முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.