Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் கடுமையான வெப்பம் - செவிலியர் யூனியன் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கடுமையான வெப்பம் - செவிலியர் யூனியன் எச்சரிக்கை

13 ஆவணி 2026 வியாழன் 13:00 | பார்வைகள் : 145


பிரித்தானிய மருத்துவமனைகள் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், செவிலியர்கள் கடும் வெப்பத்தால் மயங்கி விழும் நிலை காணப்படுவதாகவும் பிரித்தானிய செவிலியர் யூனியன் எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது, இங்கிலாந்தில் முக்கால் பாகத்தில் வறட்சி நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பத்தால் செவிலியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மயங்கி விழும் நிலை காணப்படுவதாகவும் செவிலியர்கள் யூனியனான RCN தெரிவித்துள்ளது.

வெப்பம் காரணமாக சில செவிலியர்கள் மயங்கி விழுந்துள்ளதாகவும், பலருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலையிலும் அவர்கள் வயதான மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலிருக்கும் நோயாளிகளை பாதுகாக்கவும், மருந்துகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளது RCN.

தங்கள் வார்டில் ஏர் கண்டிஷனர் இல்லை என்று கூறும் இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஒருவர், தாங்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கிறார்.

ஆகவே, மருத்துவமனைகளில் உடனடியாக ஏர் கண்டிஷனர் வசதி செய்து தரவேண்டும் என்றும், வெயிலுக்கு ஏற்ற வகையில் அணியும் சீருடைகளை வழங்கவேண்டும் என்றும் RCN கேட்டுக்கொண்டுள்ளது.

செவிலியர்கள் நிலையே இப்படி என்றால், நோயுடன் அவதியுற்றுவரும் நோயாளிகள் நிலை என்ன என்பது தெரியவில்லை.