Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்பு

இலங்கையில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்பு

13 ஆவணி 2026 வியாழன் 13:05 | பார்வைகள் : 143


வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் அமைந்துள்ள வீதியொன்றில், சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் இன்று வியாழக்கிழமை காலை முச்சக்கர வண்டியொன்றில் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் காலை 6.15 மணியளவில் குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், சுமார் நான்கு வயதுடைய இச்சிறுமியை அங்கு இறக்கிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பிரதேசவாசிகள், பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய, உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற வத்துகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியைத் தமது பொறுப்பில் எடுத்து, வத்தேகம வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சையளித்த பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பச்சை நிற முச்சக்கர வண்டியிலேயே அச்சிறுமி அங்கு கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளதுடன், சிறுமியின் பெற்றோரே இவரை முச்சக்கர வண்டியில் கொண்டுவந்து கைவிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காகத் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமி தொடர்ச்சியாகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை அவரது உடலமைப்பின் அறிகுறிகள் மூலம் தெரியவருவதால், இது தொடர்பான மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.