Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

23 ஆடி 2026 வியாழன் 16:16 | பார்வைகள் : 247


இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பரவலாகக் காணப்படும் தொற்றும் நோய்களில் ஒன்றான இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேங்கி நிற்கும் நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சேறு நிறைந்த சூழலில் பணியாற்றுபவர்கள் மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.