Paristamil Navigation Paristamil advert login

Choisy-le-Roi பகுதியில் 500 கிலோ இரண்டாம் உலகப்போர்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 9,000 பேர் அவசர வெளியேற்றம்!!

Choisy-le-Roi பகுதியில் 500 கிலோ இரண்டாம் உலகப்போர்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு:  9,000 பேர் அவசர வெளியேற்றம்!!

23 ஆடி 2026 வியாழன் 21:07 | பார்வைகள் : 1421


Choisy-le-Roi பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்கால 500 கிலோ எடையுடைய வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய, ஜூலை மாதம் 25ஆம் திகதி அன்று மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. வெடிகுண்டில் சுமார் 280 கிலோ வெடிபொருள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் சுமார் 9,000 பேர் தற்காலிகமாக வெளியேற்றப்படவுள்ளனர். 

இந்த நடவடிக்கைக்காக 600 காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுக்கள் களமிறங்குகின்றன. 700 மீட்டர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுவதுடன், அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் RER C தொடருந்து சேவையும், சில தேசிய தொடருந்து போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதால் பயணிகள் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

1943ஆம் ஆண்டு விமானத்திலிருந்து வீசப்பட்டதாகக் கருதப்படும் இந்த வெடிகுண்டு இதுவரை வெடிக்காமல் இருந்தது. தற்போது அது வெடித்தால் சுமார் 1,200 மீட்டர் தூரம் வரை சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் Choisy-le-Roi மற்றும் Orly பகுதிகளில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.