Paristamil Navigation Paristamil advert login

கருவேல மரங்களை அகற்ற முன்வரும் அமைப்புகளுக்கு ஒரே நாளில் அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

கருவேல மரங்களை அகற்ற முன்வரும் அமைப்புகளுக்கு ஒரே நாளில் அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

25 ஆடி 2026 சனி 11:10 | பார்வைகள் : 151


சீமை கருவேல மரங்களை அகற்ற முன்வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு , 24 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

நுரையீரல் பாதிப்பு

இந்த வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் சீமை கருவேலம் மரங்களை அகற்றினோம். கருவேலம் மரங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவால், எனது நுரையீரல்  பாதிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள், கருவேலம் மரங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கும்படி, தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும். மரங்களை அகற்ற அனுமதி கோருவோருக்கு, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.சரவணன் ஆஜராகி, ''புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளர்ந்திருந்த கருவேலம் மரங்கள் 90 சதவீதம் அகற்றப்பட்டு விட்டன. வட மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்வதற்காக, நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன், அரசு துறை செயலர்கள் எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை. இதனால், நீதிபதிகளுக்கு யாரை சந்திப்பது என்பது கூட தெரியவில்லை' என, அதிருப்தி தெரிவித்தனர்.

eஇதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய் துறை செயலரை, 'நோடல்' அதிகாரியாக நியமிக்கிறோம்.

அவர், வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி, தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதேபோல், சீமை கருவேல மரங்களை அகற்ற, தேவையான நிதியை, தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.

அரசு நிலங்களில், சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், 'மனுதாரர் வைகோவை பின்பற்றி, கருவேல மரங்களை அகற்றும் பணிகளில், தன்னார்வலர்கள் நேரில் களமிறங்க வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.