தலைமை பண்புகளை வளர்த்து மாணவர்கள் தலைவர்களாக உருவாகணும்:அண்ணாமலை
25 ஆடி 2026 சனி 12:13 | பார்வைகள் : 136
தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொண்டு மாணவர்கள் தலைவர்களாக உருவாக வேண்டும்,'' என, பொள்ளாச்சியில் நடந்த விழாவில் வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், தொழில் முனைவோர் மையம், புதிய மாணவர் வரவேற்பு விழா நடந்தது. கல்லுாரி செயலர் சேதுபதி வரவேற்றார். கல்லுாரி தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
கல்லுாரி துணை தலைவர் விஜயமோகன் பேசினார். போதை தடுப்பு குழு உருவாக்கப்பட்டு, போஸ்டர் வெளியிட்டு, உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
மாணவர்கள் ஒவ்வொரு நாளும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்; கல்லுாரியில் மூன்றாண்டுகள் முறையாக படித்தால் தான், வெளி உலகத்துக்கு ஏற்ப நாம் மாற முடியும்.
இன்றைய சமுதாயத்தில், யார் உருவாக்கும் திறனை கொண்டுள்ளார்களோ, அவர்களை தான் உலகம் மதிக்கிறது; எனவே, கிரியேட்டர்களாக உருவாக வேண்டும்.
கல்லுாரி மாணவர்கள் நுாலகங்களுக்குச்சென்று புத்தகங்களை படித்து, திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதுபோன்று, விளையாட்டு என மற்ற திறமைகளை மேம்படுத்த ஆர்வம் காட்டவேண்டும். நேரம் இல்லை என கூறக்கூடாது; நேரத்தை வகுத்துக்கொண்டு வளர வேண்டும்.
இன்றயை உலகில் அனைவரும் பல்வேறு தாக்கங்களால் சூழப்பட்டு வருகிறோம்; குறிப்பாக பெரிய பிராண்டுகள் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன. அந்த பிராண்டுகளை நாமே உயர்த்தி பிடித்து, அவற்றுக்குள்ளேயே வாழும் நிலைக்கு வந்துவிட்டோம்.
இப்போது, உங்களது முன் இரண்டு வழிகள் இருக்கின்றன; நீங்கள் அந்தபிராண்டுகளின் அடையாளமாக மாறலாம் அல்லது அவற்றை உயர்த்திப்பேசும் மனிதர்களாக இருக்கலாம்; மற்றொன்று இவை அனைத்தையும் தாண்டி நீங்களாக வாழலாம்.
வரும், 10 -15 ஆண்டுகளில், இந்தியாவில் மிகப்பெரிய பிராண்டுகள், சினிமா நட்சத்திரங்கள், பிராண்ட் அம்பாசிடர்கள் ஆகியோரின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.
அவர்கள் சொல்லும் விளம்பரங்களை நம்பி நீங்கள் சட்டை, பேண்ட், சேலை, அழகு சாதன பொருட்களை வாங்குவீர்கள்; ஆனால் விளம்பரப்படுத்தும் பலர் குறிப்பாக, சினிமா நடிகைகள், 30 ரூபாய் மதிப்புள்ள கிரீம்களை பயன்படுத்த மாட்டர்கள். அவர்கள், வெளிநாடுகளில் கிடைக்கும் உயர்தர அழகு சாதனங்களை பயன்படுத்துவர்.
மாணவர்களே, இந்த, 'கல்ட் விஎஸ் காமன்' என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். உங்கள் தலைமுறையிலேயே இந்த கல்ட் கலாசாரம் முற்றிலும் அழிய வேண்டும் என்பது எனது விருப்பம்.
மாணவர்கள் தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொண்டு, தலைவர்களாக உருவாக வேண்டும். நல்ல பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, சிந்தனையாளர்களாக உருவாக வேண்டும். சமுதாயத்தின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்காக, உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire