Paristamil Navigation Paristamil advert login

பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

26 ஆடி 2026 ஞாயிறு 05:05 | பார்வைகள் : 128


நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 36 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போராட்டக்காரர்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்;  கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வுகள் தனக்கு வேதனை அளிக்கின்றன. நாட்டின் இளைஞர்கள் தீயசக்திகளின் கைகளில் சிக்கிக் கொள்ள அனுமதிக்க மாட்டேன். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேச விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இந்தியாவில் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கி விடக் கூடாது.  மாணவர்கள் தங்களின் படிப்பிலும், தொழில் வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்.  இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அவர்களின் கனவுகளை நனவாக்குவது நமது கடமை.

இந்தியாவின் இளைஞர் சக்தியே நமது உண்மையான பலம். அவர்களின் கனவுகள், எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்கிறேன். இளைஞர்களின் எதிர்காலத்திற்காக ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன்.  ஜூலை 16ல் வெளியான நீட் மறுதேர்வு முடிவுகள் திருப்தி அளித்தது. எளிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களும் வெற்றி சாதனை படைத்தனர்.

இந்தச் சூழலிலும் கூட பொறுப்பான பதவிகளில் இருக்கும் சிலர் தடைகளை உருவாக்கவும், பல மாணவர்களை தவறாக வழிநடத்தவும் முயன்றனர். இது என்னை வேதனையடையச் செய்தது. தேசப் பணியே என் வாழ்வின் உயர்ந்த முன்னுரிமையாகும். அதற்கு நான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும், புதிய அமைச்சர் நியமிக்கப்படும் வரை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டு உள்ளது. பிரகலாத் ஜோஷி தற்போது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சராக உள்ளார்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததையடுத்து, டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிஜேபி இயக்கத்தினர் உற்சாக முழக்கமிட்டனர். அப்போது, சிஜேபி இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறுகையில், ' தர்மேந்திர பிரதான் தானாக பதவி விலகவில்லை. நாம் தான் விலகச் செய்தோம். எஞ்சியுள்ள இரு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்,' என்றார்.   அதேபோல, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனம் வாங்சுக், சமூக ஆர்வலர்: இது ஜனநாயகத்தின் வெற்றி. ஜனநாயகம் நேரடியாக வீதிகளில் இருந்து உருவானது. அமைதி, பொறுமை மற்றும் விடாமுயற்சியின் வெற்றி. சிஜேபி மற்றும் நாட்டின் இளைய தலைமுறையினருக்கு எனது வாழ்த்துகள். அச்சத்தை உதறிவிட்டு நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எழுந்து நின்ற குடிமக்கள் அனைவருக்கும் நன்றி.