Paristamil Navigation Paristamil advert login

Sarcelles நகரில் ஆயுதங்கள் பறிமுதல்:6 பேருக்கு நீதிமன்றக் காவல்!!

Sarcelles நகரில் ஆயுதங்கள் பறிமுதல்:6 பேருக்கு நீதிமன்றக் காவல்!!

26 ஆடி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 1144


Sarcelles நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலமான சினகோக்கை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஆறு பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட வாகனத் திருட்டு, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் ஆயுத விநியோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்காலிகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு நீதித்துறை தனியாக விசாரணையைத் தொடர்ந்து வருகிறது.

இந்த வழக்கு, DGSI-க்கு கிடைத்த "Sarcelles சினகோக்கை இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய இஸ்லாமிய தாக்குதல்" குறித்த தகவலைத் தொடர்ந்து ஆரம்பமானது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி Sarcelles நகரில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த Toyota வாகனத்தில் Kalachnikov தாக்குதல் துப்பாக்கி, Beretta கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 300 பேர் பாதுகாப்பு காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலின் உண்மையான இலக்கு சினகோக்கா அல்லது வேறு இடமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், யூத சமூகத்தை நேரடியாக குறிவைத்ததாக நிரூபிக்கும் ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனம், ஆயுதங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் கிடைத்த மரபணு (DNA) தடயங்கள், கண்காணிப்பு ஒளிப்படப் பதிவுகள் மற்றும் தொலைபேசி தகவல்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, ஜூலை மாதம் 21ஆம் திகதி 22 முதல் 40 வயதுக்குட்பட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும், ஆயுதங்கள் இருந்த Toyota வாகனத்தை யார் அனுப்பினர், இதன் பின்னணியில் பயங்கரவாதத் திட்டம் இருந்ததா என்பது உள்ளிட்ட அம்சங்களை கண்டறிய பயங்கரவாத தடுப்பு நீதித்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.