Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் நடைபவனி கூட்டத்திற்குள் வேன் மோதி விபத்து- ஒருவர் பலி

ஜேர்மனியில் நடைபவனி கூட்டத்திற்குள்  வேன் மோதி விபத்து- ஒருவர் பலி

26 ஆடி 2026 ஞாயிறு 11:34 | பார்வைகள் : 234


ஜேர்மனி தலைநகர் பெர்லினில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரபலமான எல்.ஜி.பி.டி.க்யூஸ்ரீ சமூகத்தினரின் நடைபவனி பேரணியின் போது, வெள்ளை நிற வேன் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக நடைபவனி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வந்த அனைத்து இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் பெர்லின் பொலிஸார் உடனடியாக இரத்து செய்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 10.00 மணியளவில், பெர்லினின் பூங்கா பகுதியில் மக்கள் திரண்டிருந்த இடத்திற்குள் வேன் புகுந்து பலரை மோதிய பின்னர் மரம் ஒன்றில் மோதி நின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடனும் காணப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவல்களையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து பிராண்டன்பர்க் கேட் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதாக பெர்லின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புளோரியன் நாத் தெரிவித்தார். 

அவர் பெர்லினில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத வட்டாரங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸாருக்குத் தெரிந்திருப்பதாகவும், எனினும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்றும், தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தாக்குதலுக்கான நோக்கம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நடைபவனிக்காக ஏற்கனவே 2,200-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், சம்பவத்துக்குப் பின்னர் மேலதிக பாதுகாப்புப் படையினரும் அவசர மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பெர்லின் மேயர் காய் வேக்னர் தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் கண்டனத்தையும் வெளியிட்டதுடன், "சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரத்தின் கொண்டாட்டத்தின் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் செயல்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.