Paristamil Navigation Paristamil advert login

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு இடம் தந்த இ.கம்யூ.க்கு: முதல்வரை விமர்சித்ததால் ஆவேசம்

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு இடம் தந்த இ.கம்யூ.க்கு: முதல்வரை விமர்சித்ததால் ஆவேசம்

27 ஆடி 2026 திங்கள் 07:54 | பார்வைகள் : 195


சென்னையில், கரப்பான் ஜனதா கட்சி போராட்டம் நடத்த இடம் கொடுத்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை, த.வெ.க., மேலிடம் கண்டித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக, கரப்பான் ஜனதா கட்சியினர், டில்லியில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த, சென்னை தி.நகரில் உள்ள, தங்கள் கட்சி தலைமை அலுவலகமான, பாலன் இல்லத்தில், இ.கம்யூ., இடம் கொடுத்தது.

அந்த போராட்டத்தில் பங்கேற்ற சிலர், 'நீட்' எதிர்ப்பு என்ற பெயரில், முதல்வர் விஜய்க்கு எதிராக விமர்சனம் செய்தனர். இது ஆளும் கட்சியான த,வெ,க,வுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால், தங்கள் கூட்டணியில் இருக்கும் இ.கம்யூ., கட்சியை, த.வெ.க., தலைமை கண்டித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

இ.கம்யூ., மாநில நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ஆரம்பத்தில், பா.ஜ.,வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இருந்தது. இதை தங்களுக்கு சாதகமாக்க, கரப்பான் ஜனதா கட்சியினருக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், த.வெ.க., அரசுக்கு எதிராகவும், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்துக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் திசை மாறியது.

இதை உளவுத்துறை வாயிலாக அறிந்த த.வெ.க., மேலிடம், இ.கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியனை எச்சரித்துள்ளது. எனவே, ஆர்ப்பாட்டம் திசை மாறுவதாக, கரப்பான் ஜனதா கட்சி குழுவிடம் வீரபாண்டியன் கூறினார். அதற்குள், ஆர்ப்பாட்டத்துக்குள், திரை பிரபலங்களும், தி.மு.க.,வினரும் புகுந்து விட்டனர்.

கடைசி நாளில், மொத்த ஆர்ப்பாட்ட களமும் முதல்வர் விஜய்க்கு எதிராக திரும்பி, அவருக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி, த.வெ.க., அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதை, வீரபாண்டியனால் தடுக்க முடியவில்லை.

இதனால், டென்ஷனான த.வெ.க., மேலிடம், 'கூட்டணியில் இருப்பதை மறந்து விட்டீர்களா; தமிழகம் முழுதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தினோம். ஆனால், நீங்கள் இடம் கொடுத்து, நம் அரசுக்கு எதிராகவே போராட்டம் செய்ய வைத்துள்ளீர்கள்.

குறிப்பாக, இ.கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், மறைமுகமாக த.வெ.க.,வை சாடுகிறார். இதுதான் கூட்டணி தர்மமா என கொந்தளித்தது.

இதையடுத்து, 'கடைசி நாளில், போராட்டம் திசை மாறி விட்டது. இனி, இதுபோல் நடக்காது' என இ.கம்யூ., தரப்பில் இருந்து த.வெ.க., மேலிடத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே, 'நம்மை கேள்வி எழுப்ப த.வெ.க., யார்; நாம் அவர்களுக்கு ஏன் பதில் சொல்லவேண்டும்' என, இ.கம்யூ., கட்சிக்குள் பிரச்னை வெடிக்க தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.