Paristamil Navigation Paristamil advert login

Tour Montparnasse-இல் அபாய எச்சரிக்கை – கண்ணாடி பலகைகள் விழுந்ததால் வீதிகள் மூடப்பட்டன!!

Tour Montparnasse-இல் அபாய எச்சரிக்கை – கண்ணாடி பலகைகள் விழுந்ததால் வீதிகள் மூடப்பட்டன!!

27 ஆடி 2026 திங்கள் 07:38 | பார்வைகள் : 1810


தலைநகர் பரிசில் அமைந்துள்ள 209 மீட்டர் உயரமுடைய Tour Montparnasse கட்டிடத்தின் மேல்தளங்களில் இருந்து பல பெரிய கண்ணாடி பலகைகள் (baies vitrées) 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரையில் விழுந்தன. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மேலும் விழும் அபாயம் இருந்த கண்ணாடிகளை பாதுகாப்பாக அகற்றினர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, rue Edgar-Quinet மற்றும் rue du Départ ஆகிய வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. கயிறு உதவியுடன் உயரத்தில் இருந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

1973-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட Tour Montparnasse-க்கு சுமார் 800 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான மிகப்பெரிய நவீனமயமாக்கல் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கூரை அகற்றும் செலவு 30 மில்லியன் யூரோக்களில் இருந்து 90 மில்லியன் யூரோக்களாக உயர்ந்ததால் திட்டம் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் பரிஸ் நகரின் முக்கியமான நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகளில் ஒன்றாக இருப்பதால், அது கைவிடப்படாது என்றும், திட்டமிட்டபடி செப்டம்பரில் பணிகள் தொடங்கும் என்ற நம்பிக்கையை உள்ளூர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.