Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் தாக்கும் கடும் வெப்ப அலை- பரிஸ் நகரில் 38°C வரை உயரும் வெப்பநிலை!!

மீண்டும் தாக்கும் கடும் வெப்ப அலை- பரிஸ் நகரில் 38°C வரை உயரும் வெப்பநிலை!!

27 ஆடி 2026 திங்கள் 20:24 | பார்வைகள் : 1363


வார இறுதியில் நிலவிய சற்றே குளிர்ச்சியான வானிலைக்குப் பிறகு, நாளை ஜூலை மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல்  நாடு முழுவதும் புதிய கடும் வெப்ப அலை பரவத் தொடங்கும் என Météo-France அறிவித்துள்ளது. 29 ம் திகதி புதன்கிழமை வெப்பத்தின் உச்சம் பதிவாகும் என்றும், இந்த வாரம் முழுவதும் அதிக வெப்பநிலை நீடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது 2026 கோடைக்காலத்தின் நான்காவது கடுமையான வெப்ப அலை என்றும், 1947 முதல் தேசிய அளவில் பதிவாகும் 54வது வெப்ப அலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 32°C முதல் 35°C வரை வெப்பநிலை பதிவாகும். தென்மேற்கு பகுதிகளில் 36°C முதல் 37°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை வெப்பம் மேலும் தீவிரமடைந்து Paris மற்றும் Tours நகரங்களில் 38°C, Lyon மற்றும் Grenoble நகரங்களில் 36°C, தென்மேற்கு பகுதிகளில் சில இடங்களில் 40°C வரை வெப்பநிலை எட்டக்கூடும் என Météo-France தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை முதல் அதிக வெப்பம் கிழக்குப் பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நாடு முழுவதும் வாரம் முழுவதும் அதிக வெப்பநிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பல நாட்கள் இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவுவதே "வெப்ப அலை" எனக் கருதப்படுவதுடன், மக்கள் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்த்து, போதிய அளவு தண்ணீர் அருந்தி, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.