Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் உருவாகும் புதிய வெப்ப அலை... போர்க்கால நடவடிக்கையில் இரண்டு ஐரோப்பிய நாடுகள்

மீண்டும் உருவாகும் புதிய வெப்ப அலை... போர்க்கால நடவடிக்கையில் இரண்டு ஐரோப்பிய நாடுகள்

28 ஆடி 2026 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 144


இந்த வாரம் உருவாகவிருக்கும் மற்றொரு வெப்ப அலையால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு, பற்றியெரியும் காட்டுதீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.

புதன்கிழமை முதல் வெப்பநிலை மீண்டும் உயர்வதற்கு முன்பு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகள் மிக முக்கியமான நாட்கள் என்று ஸ்பெயினின் உள்விவகார அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா கூறியுள்ளார்.

அதேவேளை, நாம் கடினமான, சிக்கலான மணி நேரங்களை எதிர்கொள்ளவிருக்கிறோம் என பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, காட்டுத்தீயால் எரிந்த நிலப்பரப்பின் அளவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை வருடமாக அமையக்கூடும் என்ற நிலையில், நவம்பர் மாதத் தொடக்கம் வரையிலும் கூட காட்டுத்தீ தொடர்ந்து எரியக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்ரிட் நகருக்கு மேற்கே உள்ள அவிலா (Ávila) மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பை எரித்து, ஸ்பெயினின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீயாக மாறியுள்ளது.

மாட்ரிட் நகருக்கு வடமேற்கே ஏற்பட்டுள்ள இரண்டு தனித்தனி காட்டுத்தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்; இதனால் தலைநகருக்கு அருகிலுள்ள தீயினால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பின் மொத்த அளவு 70,000 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினின் அரசு வானிலை ஆய்வு அமைப்பான 'ஏமெட்' (Aemet) வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை தொடங்கும் புதிய வெப்ப அலையானது குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அப்பகுதியில் வீசும் பலத்த தெற்குத் திசைக் காற்று ஆகியவற்றால் தீயணைப்புப் பணிகள் மேலும் கடினமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வாரத்தில் மற்றொரு வெப்ப அலை வீசுவதற்கு முன்னதாகவே காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் எரிக் ப்ரோகார்டி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, காட்டுத்தீ நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவு வரை நெருங்கிவிட்ட நிலையில், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தயாராகி வருவதாக போர்டோ (Bordeaux) நகர மேயர் தாமஸ் கசெனேவ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டால், அவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்டோ (Bordeaux) பகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, ​​பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் தெரிவிக்கையில், வரவிருக்கும் வாரங்கள் கடினமானவையாக இருக்கும்; நாம் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

ஜிரோண்ட் (Gironde) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ இதுவரை 42,000 ஹெக்டேர் நிலத்தை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது; இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்சில் நிலப்பரப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளில் ஒன்றாகும் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த ஆண்டு எரிந்துபோன 172,000 ஹெக்டேர் வனப்பகுதியானது, 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தீக்கிரையான அளவை விட ஆறு மடங்கு அதிகம் என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காலநிலை நெருக்கடி இல்லாவிட்டால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாத தொடர்ச்சியான வெப்ப அலைகளாலும் (ஜூன் மாதத்தில் பதிவான சாதனை அளவிலான வெப்பம் உட்பட), அதனால் வறண்டுபோன மண் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையில் உள்ள தாவரங்களாலும் இந்த கோடைக்காலத் தீ விபத்துகள் தீவிரமடைந்துள்ளதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டுத்தீ பருவம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்று ஐரோப்பிய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் வாரத்தின் நடுப்பகுதியில் இருந்து காட்டுத்தீயை அணைப்பதற்கான அபாயங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகமானப் பரப்பளவில் மிக வேகமாகப் பரவியுள்ள அண்மைய காட்டுத்தீச் சம்பவங்களின் முன்னெப்போதும் இல்லாத தன்மையை அதிகாரிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

தெற்கு ஸ்பெயினில் அண்மையில் 13 பேரின் உயிரைப் பறித்த காட்டுத்தீ மணிக்கு 4 மைல் வேகத்தில் பரவியதாக ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்; ஆனால், தீயணைப்பு வீரர்களால் மணிக்கு 300 மீற்றர் அல்லது அதற்கும் குறைவான வேகத்தில் பரவும் தீயை மட்டுமே எதிர்கொள்ள முடிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி லங்காஸ்ரீ