Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 50க்கும் மேற்பட்டோர் காயம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 50க்கும் மேற்பட்டோர் காயம்!

28 ஆடி 2026 செவ்வாய் 12:51 | பார்வைகள் : 147


ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குமாமோட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் வீதிகள் மற்றும் பாலங்கள் பிளவடைந்துள்ளதுடன், கட்டிடங்கள் இடிந்து விழுந்து குறைந்தது 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பூமியதிர்ச்சியின் முழுமையான பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி அறிவித்துள்ளார்.

ஒரு வைத்தியசாலையில் மாத்திரம் 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என்எச்கே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பூமியதிர்ச்சியின் போது அதிவேக புல்லட் புகையிரதத்தில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர்.

கியூஷு எலக்ட்ரிக் பவர்' நிறுவனத்தின் தரவுகளின்படி, பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில இடங்களில் தீ விபத்துகளும் கட்டிடங்கள் பகுதி அளவிலும் இடிந்து விழுந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க குமாமோட்டோ கோட்டையின் சுவர்களின் சில பகுதிகளும் இடிந்து விழுந்துள்ளன.

பிரதான வீதிகளில் பெரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சரக்கு புகையிரதம் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. புல்லட் புகையிரத சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

குமாமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு, விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதோடு, இரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய குறைக்கடத்தி தயாரிப்பு முன்னணி நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஊழியர்களைப் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றியுள்ளன.

சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 1,50,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான உறைவிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 1 மீற்றர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு மேலும் பலத்த பூமியதிர்ச்சிஅதிர்வுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.