ஆலய அன்னதான நிகழ்வில் தாக்குதல் - பெண்கள் உட்பட 4 பேர் காயம்
29 ஆடி 2026 புதன் 16:56 | பார்வைகள் : 138
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தில் உணவருந்திய இளைஞர் ஒருவர், "உணவு தரமாக இல்லை" எனக் கூறியதைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏழு பேர் கொண்டதாகக் கூறப்படும் குழுவொன்று அங்கு வந்து அன்னதானம் வழங்கியவர்களை தாக்கியதில், பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களில் ஒருவரை சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire