Paristamil Navigation Paristamil advert login

மது குடித்தால் குழந்தைகளின் மரபணு பாதிக்கும்: பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை

மது குடித்தால் குழந்தைகளின் மரபணு பாதிக்கும்: பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை

31 ஆடி 2026 வெள்ளி 07:17 | பார்வைகள் : 413


மூன்றாவது தலைமுறையும் தொடர்ந்து மது குடிப்பதால், பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படும்,'' என, பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

டாஸ்மாக் மதுக்கடைகளை தனியாரிடம் கொடுக்கும்போது, அதிக லாப நோக்கத்துடன் செயல்படுவர். அரசு நடத்தும் பார்கள் மற்றும் தனியார் பார்கள் என, எங்கு வைத்து குடித்தாலும், குடிப்பவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில், 1971ல் மதுவிலக்கு நீக்கப்பட்டது. அன்றிலிருந்து இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமையானவர்களாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, 55 வயதானாலும் ஆரோக்கியமாக இருந்த தமிழக மக்களின் மரபணு, தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மிகப்பெரிய அழிவு மற்றும் மரபணு மாற்ற பேரிடரை நோக்கி செல்கிறது.

மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகும் என்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், 30 ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் இருந்தபோது, அவ்வாறு நடக்கவில்லை. பார்கள், மனமகிழ் மன்றங்கள் அதிகரிப்பதால், இளைஞர்களும், மாணவர்களும் இளம் வயதிலேயே மது குடிக்க பழகும் சூழல் உருவாகிறது.

கொரோனா பரவலின்போது, மதுக்கடைகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் மூடியிருந்தன. மதுக் குடிக்காமல் இருக்கும்போது ஏற்படும் சிறு பிரச்னைகளை, டாக்டர்களால் எளிதாக கையாள முடியும். அரசாங்கமும், காவல் துறையும் நினைத்தால் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.

மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட்டால், இதெல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. மது குடிப்பது என்பது ஆரம்பத்தில் பழக்கமாக இருந்து, நாளடைவில் அடிமையாக மாற்றி விடுகிறது. வெளிநாடுகளிலும் மதுப் பழக்கம் பிரச்னையாகத்தான் உள்ளது. எங்கு, யார் மது குடித்தாலும், அது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் கேடு.

இவ்வாறு அவர் கூறினார்.