Paristamil Navigation Paristamil advert login

பழநி மடம் நில மோசடி; தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

பழநி மடம் நில மோசடி; தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

31 ஆடி 2026 வெள்ளி 09:24 | பார்வைகள் : 526


திண்டுக்கல் மாவட்டம், பழநி மடத்தின் நிலம் மோசடி தொடர்பாக, ஆக., 5ல் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பழநி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு சேனாபதி உள்ளிட்டோர், பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம், தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், 'அரசியல் உள்நோக்கில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' என, தெரிவித்தார்.

மனுதாரர்களின் மூத்த வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன், வழக்கறிஞர் மாரீஸ்குமார், 'வழக்கில் முகாந்திரம் உள்ளது. சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை திட்டமிட்டு பணியில் அமர்த்தி பத்திரப்பதிவு செய்துள்ளனர். அவரை பொறுப்பு சார் - பதிவாளராக நியமித்த மாவட்ட பதிவாளரை இவ்வழக்கில் சேர்க்கவில்லை;  இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்யவில்லை. மடத்தின் நிலம் பதிவு செய்யப்பட்ட அதே நாளில், 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

கோவில் தரப்பு வழக்கறிஞர் கோவிந்தராஜன், 'கடந்த தி.மு.க., ஆட்சியில் ஏப்., 10ல் நிலம் பதிவு தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஆவணத்தை பதிவு செய்ய மறுக்கும் உத்தரவை ரத்து செய்தார். அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் வழக்கை முறையாக கையாண்டிருந்தால், தற்போது தவறாக பத்திரப்பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை' என, வாதிட்டார்.

நீதிபதிகள், 'இவ்விவகாரத்தில் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு ஆக., 5ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.