டாஸ்மாக் மதுக்கடைகளில் 50 சதவீதம் தனியார்மயம்?
31 ஆடி 2026 வெள்ளி 11:28 | பார்வைகள் : 581
தமிழகத்தில் உள்ள, 'டாஸ்மாக்' மதுக் கடைகளில், 50 சதவீத கடைகள் தனியாருக்கு கைமாறுகின்றன. குறிப்பாக, முக்கிய நகரங்களில் உள்ள மதுக் கடைகளை ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, அரசு நிறுவனம் மட்டுமே மது விற்பனையில் ஈடுபட்டு வரும் நிலையில், வணிக போட்டியை உருவாக்கி, அரசுக்கு கூடுதல் வருமானம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2003 வரை மதுபான சில்லரை விற்பனையில், தனியார் மட்டுமே ஈடுபட்டிருந்தது. போலி மது விற்பனை உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததை அடுத்து, 2003ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மதுபான சில்லரை விற்பனையை அரசு வசமாக்கினார்.
அப்போது முதல், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்று வருகிறது. தற்போதுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, மதுபானங்கள் கொள்முதல் மற்றும் மதுபான சில்லரை விற்பனையில் நடை பெறும் முறைகேடுகளை தடுக்க விரும்புகிறது.
அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், 717 மதுக் கடைகள் மூடப்பட்டன. பின், மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களிடம் இருந்து, தனியாருக்கு சென்ற பணத்தை, அரசு கஜானாவுக்கு திருப்பும் வகையில், மது பெட்டிக்கு 90 ரூபாய், பீர் பெட்டிக்கு 40 ரூபாய், ஒயின் பெட்டிக்கு 20 ரூபாய் என, கூடுதல் கட்டணமாக அரசுக்கு செலுத்த, மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் வாயிலாக அரசுக்கு ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் கூடுதல் வரு வாய் கிடைக்க உள்ளது.
டாஸ்மாக் மதுக் கடைகளை ஒட்டி குளிர்பானங்கள், தின்பண்டங்கள் விற்க, 'பார்' எனும் மதுக்கூடங்கள் உள்ளன. அவற்றுக்கான ஒப்பந்தம் முடிந்துள்ள நிலையில், ஏற்கனவே நடத்தி வரும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமின்றி, புதியவர்களும் மதுக்கூடம் எடுப்பதற்கான டெண்டரில் பங்கேற்கும் வகையில், விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மதுக்கடையுடன் இணைந்தே மதுக்கூடம் நடத்தப்பட்ட நிலையில், இனி மதுக் கடையை ஒட்டி அல்லது மதுக் கடையில் இருந்து, 100 மீட்டருக்குள் அமைந்துள்ள இடத்தில் மதுக் கூடம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
அடுத்த கட்டமாக, மதுபான சில்லரை விற்பனையில் போட்டியை உருவாக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, மொத்தம் உள்ள மதுக் கடைகளில், 50 சதவீதத்தை டாஸ்மாக் வசமும், மீதமுள்ள 50 சதவீத கடைகளை தனியார் வசமும் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த ஒரு வணிகமாக இருந்தாலும், ஒரே நிறு வனம் மட்டும் இல்லாமல், போட்டி இருந்தால் தான், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைக்கும். தமிழகத்தில் சில்லரை கடைகள் வாயிலாக, மது மட்டுமே அரசு விற்கிறது.
அந்த கடைகளின் பணியாளர்கள், பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தாலும், முறைகேடு தொடர்கிறது. இதனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
மது விற்பனை வாயிலாக, அரசுக்கு கூடுதல் வருவாய் பெறுவதோடு, முறைகேட்டை தடுத்து, தனியாருக்கு செல்லும் பணத்தை அரசுக்கு திருப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி, மது விற்பனையில் டாஸ்மாக் மட்டுமின்றி, தனியாருக்கும் அனுமதி அளிக்க தீவிர ஆலோசனை நடக்கிறது.
சென்னை மற்றும் 10 லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகை உடைய முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான மதுக் கடைகளை, தனியார் வசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மொத்தம் உள்ள 4,048 கடைகளில், பாதி கடைகளை டாஸ்மாக் நிறுவனமும், மீதி கடைகளை தனியாரிடம் தரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பழனிபாரதி கூறுகையில், ''மதுபான பாட்டில் விலையை விட, 1 ரூபாய் கூட அதிகம் வாங்கக்கூடாது என, சங்கத்தின் சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மது விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்துள்ளதை, நாங்கள் வரவேற்கிறோம்,'' என்றார்.
தனியார் மயமாக்க எதிர்ப்பு
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் மொத்தமுள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில், நகரப் பகுதிகளில் உள்ள 2,500 டாஸ்மாக் கடைகளை மட்டும் தனியார்மயமாக்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார் மதுக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தில் மது வெள்ளமாக பாயும். எனவே, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட்டு, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க, சட்டசபை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வர, த.வெ.க., அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தனியார் வசம் ஒப்படைக்கும் அரசின் முடிவு, சட்டவிரோத மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறைக்காது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனையால், தமிழக அரசுக்கு 2025 - 26ல் ஆயத்தீர்வை வாயிலாக 11,836 கோடி ரூபாயும், மதிப்பு கூட்டு வரி வாயிலாக 39,010 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire