Paristamil Navigation Paristamil advert login

காட்டுத்தீ பேரழிவை பயன்படுத்திய கொள்ளையர்கள் – Gironde பகுதியில் 22 கொள்ளை வழக்குகள் பதிவு!!

காட்டுத்தீ பேரழிவை பயன்படுத்திய கொள்ளையர்கள் – Gironde பகுதியில் 22 கொள்ளை வழக்குகள் பதிவு!!

31 ஆடி 2026 வெள்ளி 07:24 | பார்வைகள் : 2182


Gironde பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ காரணமாக 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட நிலையில், காலி செய்யப்பட்ட வீடுகளை குறிவைத்து நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 22 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Bordeaux அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 17 வழக்குகள் Gendarmerie பிரிவிலும், 5 வழக்குகள் காவல்துறை பிரிவிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வீட்டில் உடைப்பு அல்லது சந்தேகத்திற்கிடமான தடயங்கள் தென்பட்டால் உடனடியாக 17 என்ற அவசர இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் Saumos பகுதியில் தொடங்கிய தீ விபத்துகளைத் தொடர்ந்து, திட்டமிட்டு தீவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்பாக இதுவரை  275 பேர் கைது செய்யப்பட்டு, 31 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீகளில் சுமார் 70 சதவீதம் குற்றச்செயல்களால் ஏற்படுகின்றன என்றும் உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு பணிகளில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், Bordeaux அருகிலுள்ள 9 நகராட்சிகளில் வசித்த 84,000 பேர் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெளியேற்றப்பட்ட 2,20,000 பேரில் 1,44,000 பேர் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதிலுமிருந்து வந்த 3,300 தீயணைப்பு வீரர்கள், 1,500 இராணுவத்தினர், 1,250 காவல்துறையினர், வனத்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 230 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதேவேளை A63 நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டாலும், Bordeaux தெற்குப் பகுதிக்கான TGV தொடருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.