Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ்–ஸ்பெயின் எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பு 5 மடங்கு அதிகரிப்பு!!

பிரான்ஸ்–ஸ்பெயின் எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பு 5 மடங்கு அதிகரிப்பு!!

1 ஆவணி 2026 சனி 07:20 | பார்வைகள் : 2996


334 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் கூடுதலாக களமிறக்கம்:

மொராக்கோவில் இருந்து Ceuta பகுதிக்குள் பெருமளவில் புலம்பெயர்ந்தோர் வந்துள்ளதைத் தொடர்ந்து, பிரான்ஸ்–ஸ்பெயின் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 1ஆம் திகதி சனிக்கிழமை முதல் எல்லையில் வழக்கமான பணியாளர்களுக்கு மேலதிகமாக பணியில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் அதிகாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 334 பேர் கூடுதலாக களமிறக்கப்படவுள்ளனர்.

ட்ரோன்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு:

உள்துறை அமைச்சர் Laurent Nuñez வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை முதலே கூடுதல் பாதுகாப்புப் படையினர் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டு 184 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் இந்த எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்த்தப்படும். மேலும், எல்லைப் காவல்துறை பிரிவைச் சேர்ந்த மூன்று விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவதுடன், பிரான்ஸ்–ஸ்பெயின் தொடருந்து பாதையில் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

A9 நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய பாதைகளில் சோதனை:

குடியேற்ற அழுத்தம் பிரான்ஸை இன்னும் பாதிக்கவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக Pyrénées-Orientales பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Pyrénées-Orientales பகுதியில் 170 காவல்துறையினர், இதில் இரண்டு CRS பிரிவுகளும், கூடுதல் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர். A9 நெடுஞ்சாலை மட்டுமின்றி, மாற்றுப் பாதைகளாக பயன்படுத்தக்கூடிய சிறிய எல்லைக் கடப்புப் பகுதிகள் மற்றும் மலைப் பாதைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சனிக்கிழமை முதல் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களின் வருகையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளன.