Paristamil Navigation Paristamil advert login

கீவ் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு...

கீவ் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு...

1 ஆவணி 2026 சனி 16:50 | பார்வைகள் : 550


உக்ரைனின் தலைநகரான கீவ் மீது இரவோடு இரவாக ரஷ்யா ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் மாநில அவசரகால சேவை சனிக்கிழமை காலை தெரிவித்தது.

ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைகள் பல வீடுகளையும் ஐந்து மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்றையும் தாக்கியதோடு, கார்களும் தீப்பற்றி எரிந்தன. 

காயமடைந்த 23 பேரில் நான்கு பேர் குழந்தைகள் என அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலின் போது சேதமடைந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பலர் சிக்கிக்கொண்டதாக கீவ் மேயர் விட்டலி கிளிச்கோ தெரிவித்துள்ளார். 

கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் பகுதியளவு இடிந்து விழுந்ததாகவும், அதேவேளையில் நகரிலுள்ள சில கிடங்குகளிலும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறினார்.

ரஷ்யா ஒரே இரவில் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட 35 ஏவுகணைகளையும், 185 தாக்குதல் ட்ரோன்களையும் ஏவியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

ஒரே ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மட்டுமே இடைமறிக்கப்பட்டதாகவும், உக்ரைனின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான இடைமறிப்பான்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

18 குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு பள்ளி, லித்துவேனிய தூதரகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன என்றும் கீவ் மேயர் மேலும் தெரிவித்தார்.