Paristamil Navigation Paristamil advert login

இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீக்கக்கோரி வழக்கு

இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீக்கக்கோரி வழக்கு

2 ஆவணி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 463


தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், விராலிமலை, கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு பின், எம்.எல்.ஏ.,க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், காலியானதாக அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., நிர்வாகியுமான கே.வெங்கடாஜலபதி, பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, ஜூலை 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

பின்னர், இந்த தடையை வரும், 24ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, விராலிமலை, கரூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியை ராஜினாமா செய்த சி.விஜய பாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்கள் விபரம்:

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்துக்காக, மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

பொது நலன் சார்ந்த வழக்கு தொடர்பாக, எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கு முன்பே, நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்து விட்டது.

விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் தொடர்பான உண்மை நிலவரங்களைக் கருத்தில் கொள்ளாமலேயே, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், வரும், 24ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.