Paristamil Navigation Paristamil advert login

கழிவுகள் சேமிப்பு பகுதியில் தீ விபத்து – 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிப்பு!!

கழிவுகள் சேமிப்பு பகுதியில் தீ விபத்து – 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிப்பு!!

2 ஆவணி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 1779


Val-d’Oise பகுதியில் உள்ள Argenteuil நகரில் கழிவுப் பொருட்கள் மீள்சுழற்சி நிறுவனத்தில் 1ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1 மணியளவில் தீயணைப்புப் படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், 4 rue de l’Ouest பகுதியில் அமைந்துள்ள தொழிற்துறை கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோது, Green Récupération நிறுவனத்தின் சுமார் 2,500 சதுர மீற்றர் பரப்பளவிலான கட்டிடம் முழுமையாக தீக்கிரையாகியிருந்தது.

கட்டிடத்தில் ஏற்பட்ட தீ தொடர்ந்து வெளியே இருந்த கழிவுப் பொருட்கள் சேமிப்பு பகுதிகளுக்கும் பரவியதால், மொத்தமாக சுமார் 3,000 சதுர மீற்றர் பரப்பளவு தீயினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தீயினால் எழுந்த புகையின் கடுமையான நாற்றம் Argenteuil மட்டுமின்றி Hauts-de-Seine மற்றும் Yvelines பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Récupération நிறுவனத்தின் கழிவு சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி நடவடிக்கைகள் தொடர்பான தளத்தில் தீ அபாயம் இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. Val-d’Oise நிர்வாகத்தின் பதிவுகளிலும் Green Récupération தொடர்பாக 2026 மே மாதத்தில் நடவடிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.