Paristamil Navigation Paristamil advert login

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீ! 129 நிபுணர்கள் களமிறக்கும் கத்தார்

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீ! 129 நிபுணர்கள் களமிறக்கும் கத்தார்

3 ஆவணி 2026 திங்கள் 10:32 | பார்வைகள் : 552


ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search and Rescue Team) கத்தார் அரசு அனுப்பியுள்ளது.

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் வழிகாட்டுதலின் பேரில், இந்த சிறப்பு மீட்புக் குழு தோஹாவிலிருந்து ஸ்பெயினின் டொரெஜோன் விமான நிலையத்திற்குப் புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் 129 காட்டுத்தீ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளதுடன், தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவுக்குத் தேவையான மேம்பட்ட தீயணைப்பு வாகனங்கள், லாரிகள் மற்றும் நவீன உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், காட்டுத்தீயை அணைக்கும் பணிகளுக்காக ஒரு ஹெலிகாப்டரும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்காக மற்றொரு ஹெலிகாப்டரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கும் தனது நீண்டகால கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளின் போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க கத்தார் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.