Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - பலர் பாதிப்பு - மக்களை மீட்க நடவடிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - பலர் பாதிப்பு - மக்களை மீட்க நடவடிக்கை

3 ஆவணி 2026 திங்கள் 14:56 | பார்வைகள் : 529


இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பொருத்தமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், தேவையான சந்தர்ப்பங்களில் மக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி உயிர்களைப் பாதுகாக்குமாறு உரிய பிரதேசச் செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இவ்வாறு பாதுகாப்பு மையங்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு தேவையான நிதியைப் கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் பலத்த மழை வீழ்ச்சியுடனேயே இப் விபத்து சம்பவித்துள்ளது.

காணாமல்போன நபர்களைக் கண்டறிவதற்காக தற்போது பரந்த அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனர்த்த நிலைமைகள் காரணமாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.