Paristamil Navigation Paristamil advert login

ஒரு மாதத்தில் சிக்கிய லஞ்சப்பணம் எவ்வளவு: முழு விவரம்

ஒரு மாதத்தில் சிக்கிய லஞ்சப்பணம் எவ்வளவு: முழு விவரம்

4 ஆவணி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 431


கடந்த ஜூலை மாதத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப்பணம் மற்றும் அதிகாரிகள் கைது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த ஜூலை 1 முதல் 31 வரை தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில், இணை கமிஷனர், தாசில்தார், இளநிலை உதவியாளர், உதவி மின்வாரிய இன்ஜினியர், மின்வாரிய வணிக ஆய்வாளர், சமூக நலத்துறை அதிகாரி, விஏஓ, கான்ஸ்டபிள், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர், கிராம உதவியாளர்கள்,  சர்வேயர்கள், உதவியாளர்கள், வயர்மேன், ஆர்ஐ, பஞ்சாயத்து செயலாளர், தேர்தல் பிரிவு இளநிலை உதவியாளர் , துணை தாசில்தார், மாநில வரி அதிகாரி உள்ளிட்டோர், 500 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, சென்னை மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 13 அரசு அலுவலகங்களில் நடந்த மாவட்ட கண்காணிப்பு குழு அதிகாரிகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 13 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாநில எல்லையில் அமைந்துள்ள 6  தோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 9 லட்சத்து 87 ஆயிரத்து 890 ரூபாய் பறிமுதல் ஆனது. இந்த திடீர் தோதனையில் மட்டும் 23 லட்சத்து 26 ஆயிரத்து 970 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 17 ம் தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 13 லட்சத்து 88 ஆயிரத்து 750 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் சந்தேகத்துக்கு உரிய வகையில் ஜிபே வாயிலாக 94 லட்சத்து 69 ஆயிரத்து 887 ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஒரு தோடியே 8 லட்சத்து 58 ஆயிரத்து 637 ஆகும்.

மேலும், அதே காலகட்டத்தில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக தாசில்தார், தாசில்தார் டிரைவர், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு 2 முதல் 4 ஆண்டு சிறை தண்டனையுடன் ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதித்தும், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.