Paristamil Navigation Paristamil advert login

பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் உதயநிதி கைது

பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் உதயநிதி கைது

5 ஆவணி 2026 புதன் 06:30 | பார்வைகள் : 653


பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதுாறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.  தஞ்சாவூர் செங்கிப்பட்டிக்கு அழைத்து வந்த போலீசார், விசாரணைக்கு பிறகு அவரை  விடுதலை செய்தனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை தடுக்கத் தவறிய தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி நீருக்காக நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எந்தவித கவலையும் இன்றி, கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக  கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், கீர்த்தனா, ரமேஷ் உள்ளிட்ட பலரும் உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

உதயநிதி ஆபாச பேச்சு ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசுகையில், ''ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார்.  அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம். 
என்ன பொய் கேஸ் போடலாம்'' என தெரிவித்தார்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ஒரு பெயரை குறிப்பிட்டு கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி, ''எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்'' என்றார். இரட்டை அர்த்தம் வரும் வகையில், ஆபாசமாக உதயநிதி பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதுாறாக பேசியதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் நீலாங்கரை வீட்டிற்கு வந்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்து தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.

ஐகோர்ட் உத்தரவு!

உதயநிதி கைது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறுகையில், ''தஞ்சாவூர் போலீசார் உதயநிதியை கைது செய்து, தஞ்சாவூர் அழைத்து சென்றுள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்கும் நோக்கமில்லை, விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்படுவார்'' என்றார். இதனை  ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் பதிவு செய்து கொண்டார்.

பிறகு ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் கூறியதாவது: கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

ஆபாசமாக, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசிய உதயநிதி மீது தஞ்சை போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* 196 bns - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
* 192 bns -கலவரத்தை தூண்டுதல் 
* 352 bns -பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்
* 79 bns - பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல்
* 296(b) bns - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்
* 61 bns - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல்
* 351 bns - ஒருவருக்கு மிரட்டல் விடுவது
* தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் பிரிவு 4 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67

சாலை வழியாக தஞ்சாவூர் அழைத்து வரப்பட்ட உதயநிதியை செங்கிப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சுமார், ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய பிறகு அவரை விடுதலை செய்தனர்.

தவறாக பேசவில்லை

விடுதலையான பிறகு திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி கூறியதாவது:

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை. நான் பேசாததை கட், காப்பி  பேஸ்ட் செய்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.காவிரி பிரச்னையை சட்டசபையில் எழுப்பக்கூடாது என்பதற்காக அரசு டைவர்ட் செய்துள்ளது.

3000 போலீசார் பாதுகாபபுடன் பயங்கரவாதியை போல் சாலை மார்க்கமாக அழைத்துச் சென்றனர். பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் துளியும் இல்லை. தாழ்த்தி பேச வேண்டும் என நினைக்கவில்லை.

சில தலைவர்கள் நான் பேசியதை முழுவதுமாக கேட்காமல்,பார்க்காமல் தவறாக பேசியதாக தெரிவித்தது வருத்தமாக இருக்கிறது. தவறான எண்ணத்தில் பேசவில்லை. கைதுக்கு பயப்பட மாட்டேன். இன்னும் பேசுவேன். 100 முறை பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொன்முடி வரிசையில் உதயநிதி

திமுக பேச்சாளர்கள், அரசியல் மேடைகளில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசுவது புதிதல்ல. குறிப்பாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில், நரகல் நடையில் பேசுவது அவர்களுக்கு கைவந்த கலை. வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொன்முடி என ஏராளமான திமுகவினர், பெண்கள் பற்றி ஆபாசமாக பேசினர். அந்த பட்டியலில் உதயநிதியும் இப்போது இணைந்திருக்கிறார்.

பட்ஜெட்டை திசைதிருப்ப திட்டமிட்டு...

தவெக அரசின் முதலாவது பட்ஜெட் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது, மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய அறிவிப்புகளை வெளியிடவும் விஜய் அரசு திட்டமிட்டுள்ளது.

அதை திசைதிருப்பி, முக்கியத்துவம் இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் நேற்று தஞ்சையில் உதயநிதி இப்படி பேசியிருக்கலாம் என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். இப்படி பேசினால், அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்; அதனால் பட்ஜெட் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு உதயநிதி பேசியிருக்கலாம் என்கின்றனர் விமர்சகர்கள்.

சிரித்துக்கொண்டே...

பெண்கள் பற்றி இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, சிரித்துக் கொண்டே சென்றார். வேனில் செல்லும்போது சிரித்துக் கொண்டே பேட்டி அளித்தார்.

என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்; கைதுக்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது'' என போலீசார் கைது செய்து அழைத்து சென்ற போது  உதயநிதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

திமுக உத்தரவு

உதயநிதியை கைது செய்தால் மாநிலம் முழுவதும் சாலை மறியல் செய்ய திமுக மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டு இருந்தது  என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இது குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, 'இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?' என்று தோன்றியது. பிறகு உதயநிதியின் பேச்சைக் கேட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

டிரெண்டிங்!

உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர்கள் உள்பட தவெகவினர் அனைவரும் சமூக வலைதளங்களில் உதயநிதியை 'ஆபாசநிதி' என குறிப்பிட்டு கடுமையாக சாடி வருகின்றனர். 'ஆபாசநிதி' என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.